ஆஸ்திரேலியாவை வென்றது பாகிஸ்தான்: இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதிர்ச்சி

அடிலெய்டு: இரண்டாவது ஒருநாள் போட்டியில் அசத்திய பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டி அடிலெய்டில் நடந்தது. 'டாஸ்' வென்ற பாகிஸ்தான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.


ஆஸ்திரேலிய அணிக்கு மாத்யூ ஷார்ட் (19), ஜாக் பிரேசர்-மெக்குர்க் (13) சுமாரான துவக்கம் கொடுத்தனர். ஸ்டீவ் ஸ்மித் (35) ஓரளவு கைகொடுத்தார். ஜோஷ் இங்லிஸ் (18), லபுசேன் (6), ஆரோன் ஹார்டி (14), மேக்ஸ்வெல் (16), கேப்டன் கம்மின்ஸ் (13), ஆடம் ஜாம்பா (18) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஆஸ்திரேலிய அணி 35 ஓவரில் 163 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. பாகிஸ்தான் சார்பில் 'வேகத்தில்' மிரட்டிய ஹாரிஸ் ராப் 5, ஷாஹீன் ஷா அப்ரிதி 3 விக்கெட் சாய்த்தனர்.

நல்ல துவக்கம்: சுலப இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப், அப்துல்லா ஷபிக் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. இருவரும் அரைசதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு 137 ரன் சேர்த்த போது ஜாம்பா 'சுழலில்' அயூப் (82) சிக்கினார். ஜாம்பா பந்தை சிக்சருக்கு அனுப்பிய பாபர் ஆசம், வெற்றியை உறுதி செய்தார்.
பாகிஸ்தான் அணி 26.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷபிக் (64), பாபர் ஆசம் (15) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை ஹாரிஸ் ராப் வென்றார். தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டி நாளை பெர்த்தில் நடக்கிறது.


6 'கேட்ச்'விக்கெட் கீப்பராக அசத்திய முகமது ரிஸ்வான் 6 'கேட்ச்' செய்தார். ஒருநாள் போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக 'கேட்ச்' செய்த பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் பட்டியலில் முதலிடத்தை சர்பராஸ் அகமதுவுடன் (6 'கேட்ச்', எதிர்: தென் ஆப்ரிக்கா, 2015, இடம்: ஆக்லாந்து) பகிர்ந்து கொண்டார்.
* இம்மைல்கல்லை எட்டிய 11வது சர்வதேச விக்கெட் கீப்பரானார் ரிஸ்வான். ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட், 6 முறை தலா 6 'கேட்ச்' செய்துள்ளார்.

Advertisement