இந்தியா 'ஏ' திணறல் ஆட்டம்: ராகுல் மீண்டும் ஏமாற்றம்

மெல்போர்ன்: இந்தியா 'ஏ' அணியின் ராகுல், அபிமன்யு ஈஸ்வரன் மீண்டும் ஏமாற்றினர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்தியா 'ஏ' அணி, இரண்டு போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரில் (நான்கு நாள்) பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 'ஏ' வென்றது. மெல்போர்னில், இரண்டாவது டெஸ்ட் நடக்கிறது. இந்தியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 161 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 'ஏ' அணி 53/2 ரன் எடுத்திருந்தது.
இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு மார்கஸ் ஹாரிஸ் (74) நம்பிக்கை தந்தார். ஜிம்மி பீர்சன் (30), கோரி ரோச்சிசியோலி (35) ஓரளவு கைகொடுத்தனர். ஆஸ்திரேலியா 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 223 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. நாதன் மெக்ஆன்ட்ரூ (26) அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா 'ஏ' அணி சார்பில் பிரசித் கிருஷ்ணா 4, முகேஷ் குமார் 3, கலீல் அகமது 2 விக்கெட் சாய்த்தனர்.


பின் 2வது இன்னிங்சை துவக்கிய இந்தியா 'ஏ' அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் (17), லோகேஷ் ராகுல் (10) மீண்டும் மோசமான துவக்கம் கொடுத்தனர். சாய் சுதர்சன் (3), கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (11), தேவ்தத் படிக்கல் (1) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். ஆட்டநேர முடிவில் இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 73 ரன் எடுத்திருந்தது. துருவ் ஜுரல் (19), நிதிஷ் குமார் ரெட்டி (9) அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா 'ஏ' சார்பில் நாதன் மெக்ஆன்ட்ரூ, பியூ வெப்ஸ்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.



துவக்க வீரர் யார்


'பார்டர்-கவாஸ்கர்' டிராபிக்கான பெர்த் டெஸ்டில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா விலகும் பட்சத்தில், துவக்க வீரருக்கான இடத்துக்கு லோகேஷ் ராகுலை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போட்டியின் இரு இன்னிங்சிலும் ராகுல் (4, 10 ரன்) ஏமாற்றினார். இது, இந்திய தேர்வுக்குழுவினருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement