தமிழக பவுலர்கள் ஏமாற்றம்: ரஞ்சி கோப்பையில்
கவுகாத்தி: ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் தமிழக பவுலர்கள் ஏமாற்ற, அசாம் அணி முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்தது.
அசாமின் கவுகாத்தியில் நடக்கும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'டி' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், அசாம் அணிகள் விளையாடுகின்றன. தமிழக அணி முதல் இன்னிங்சில் 338 ரன் எடுத்தது. இரண்டாம் நாள் முடிவில் அசாம் அணி முதல் இன்னிங்சில் 176/3 ரன் எடுத்திருந்தது. டெனிஷ் தாஸ் (54), சிப்சங்கர் ராய் (23) அவுட்டாகாமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டத்தில் அசாம் அணிக்கு கேப்டன் டெனிஷ் தாஸ் சதம் கடந்து கைகொடுத்தார். சிப்சங்கர் ராய் அரைசதம் விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு 173 ரன் சேர்த்த போது முகமது அலி பந்தில் டெனிஷ் தாஸ் (109) அவுட்டானார். பிரதோஷ் ரஞ்சன் பால் பந்தில் சிப்சங்கர் (69) ஆட்டமிழந்தார். ஸ்வரூபம் புர்கயஸ்தா 90 ரன் குவித்தார்.
அசாம் அணி முதல் இன்னிங்சில் 445 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. தமிழகம் சார்பில் பிரதோஷ் ரஞ்சன் பால் 3, பிரணவ் ராகவேந்திரா, முகமது அலி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.
பின் 2வது இன்னிங்சை துவக்கிய தமிழக அணி, ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 8 ரன் எடுத்திருந்தது. சுரேஷ் லோகேஷ்வர் (2), நாராயண் ஜெகதீசன் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.