காயப்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள்: தலைமை நீதிபதி உருக்கம்

4


புதுடில்லி: யாரையாவது காயப்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடும்படி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.


2016 மே மாதம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக டிஓய் சந்திரசூட் நியமிக்கப்பட்டார். 2022ம் ஆண்டு நவ., மாதம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பொறுப்பு ஏற்றார். நாளை மறுநாளுடன் ஓய்வு பெறுகிறார். புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா திங்கட்கிழமை பதவியேற்க உள்ளார்.

இதனை முன்னிட்டு, நடந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் சந்திரசூட் பேசியதாவது: இந்த நீதிமன்றம் என்னை தொடர்ந்து பயணிக்க வைத்தது. நீதிமன்றத்தில் யாரையாவது நான் காயப்படுத்தி இருந்தால் நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் இந்த நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்போது எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை. ஏனென்றால் நீதிபதி சஞ்சீவ் கன்னாவைப் போன்ற ஒரு உறுதியானவர் பொறுப்பு ஏற்கிறார். அவர் மிகவும் கண்ணியமானவர்.
இவ்வாறு சந்திரசூட் பேசினார்.



முக்கிய தீர்ப்புகள்
சந்திரசூட் தலைமையிலான அமர்வு பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கி உள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:




நீதிபதியாக பணியாற்றிய கடைசி நாளான இன்று அவர் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, முஸ்லிம் அலிகார் பல்கலைக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்குவதை மறுக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது.

இதனை தவிர்த்து
1. மத்திய அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்ட வழக்கு
'மத்திய அரசின் தேர்தல் பத்திரங்கள் திட்டம் செல்லாது' என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, இதுவரை யார் யார் எந்த கட்சிக்கு எவ்வளவு பணம் நன்கொடையாக அளித்துள்ளனர் என்ற, முழு பட்டியலை பகிரங்கமாக வெளியிடுமாறு சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.


2. தனியார் நில வழக்கு

'பொதுநலனுக்காகவே இருந்தாலும், அனைத்து தனியார் சொத்துக்களையும் அரசு கையகப்படுத்த முடியாது' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. குறிப்பாக, நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில், அரசுக்கு இந்திய அரசியல் சாசனம் கொடுத்துள்ள அதிகாரத்துக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு எல்லைக்கோடு வரைந்துள்ளது.

3. காஷ்மீர் சிறப்பு சட்ட ரத்து வழக்கு

'சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த, அரசியல் சாசனத்தின், 370வது பிரிவை நீக்கியது செல்லும்' என, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவு, ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு ரோஜாவாக மலர்ந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு பிறப்பித்துள்ளது.

4. ஒரே பாலின திருமணம்

ஒரே பாலின திருமணத்துக்கு அங்கீகாரம் கேட்டு, சுப்ரீம் கோர்ட்டில் 21 வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன சட்ட அமர்வு விசாரித்தது.
கடந்த அக்., 17ல் அளித்த தீர்ப்பில், ஒரே பாலின திருமணத்துக்கு, சிறப்பு திருமண சட்டத்தின்கீழ் அங்கீகாரம் அளிக்க முடியாது என, ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு அளித்தனர். இது குறித்து, பார்லிமென்டே முடிவு செய்ய முடியும் என, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

5.குடியுரிமை சட்டத்தின் 6ஏ பிரிவு செல்லும்
அசாமில் குடியேற்றத்துக்கு அங்கீகாரம் தரும் 6ஏ சட்டப்பிரிவு செல்லும் என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், சுந்திரேஷ், பார்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. இதன் மூலம் அசாமில் 1966ம் ஆண்டு முதல் 1971 வரை குடியேறியவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மூலம் அங்கீகாரம் கிடைக்கும்.

6.சிறைகளில் ஜாதி பாகுபாடு கூடாது
தமிழகம் உட்பட 11 மாநில சிறைகளில் கைதிகளுக்கு, ஜாதி அடிப்படையில் பணிகளும், அறைகளும் ஒதுக்கப்படுவதை கண்டித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு , அதை ஊக்குவிக்கும் சிறை கையேட்டை மூன்று மாதங்களுக்குள் திருத்தும்படி மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.

7. உ.பி., மதரசா கல்வி வாரிய சட்டம்
உ.பி.,யில் மதரசா கல்வி வாரிய சட்டம் 2004 க்கு அலகாபாத் ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு, இக்கல்வி வாரிய சட்டம் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

8.நீட் தேர்வு முறைகேடு
கடந்த ஜூலை மாதம் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து அதனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சந்திரசூட் தலைமையிலான அமர்வு மறு தேர்வுக்கு உத்தரவிட மறுத்துவிட்டது.

9.குழந்தை திருமண வழக்கு
குழந்தை திருமணத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. குழந்தை திருமணங்களை தடுக்க மாவட்ட அளவில், மாநில அளவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

Advertisement