வெஸ்ட் இண்டீஸ் வீரருக்கு தடை * போட்டியில் பாதியில் வெளியேறியதால்...
பிரிட்ஜ்டவுன்: கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போட்டியில் இருந்து பாதியில் வெளியேறிய வெஸ்ட் இண்டீசின் அல்சாரி ஜோசப்பிற்கு, இரண்டு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்ஜ்டவுனில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.
இப்போட்டியின் 4வது ஓவரை வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோசப் வீசினார். தனது பந்துவீச்சுக்கு ஏற்ப 'பீல்டர்'களை நிறுத்தவில்லை என கேப்டன் ஷாய் ஹோப்புடன் வாக்குவாதம் செய்த அல்சாரி ஜோசப், ஓவரின் முடிவில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
மாற்று வீரரை களமிறக்க முடியாத சூழ்நிலை உருவானதால், 5வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 வீரர்களுடன் விளையாடியது.
இதனால் ரசிகர்கள், அம்பயர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின், பயிற்சியாளர் டேரன் சமி உள்ளிட்டோர் தலையிட, மீண்டும் போட்டியில் பங்கேற்றார் ஜோசப்.
இந்நிலையில், கேப்டனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முறையான காரணமின்றி ஆடுகளத்தை விட்டு வெளியேறிய அல்சாரி ஜோசப்பை இரண்டு போட்டியில் விளையாட தடை விதிப்பதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்தது. இதனையடுத்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரின் முதலிரண்டு போட்டியில் அல்சாரி ஜோசப் பங்கேற்க இயலாது.