சாத்தூர் ராமச்சந்திரன் மீதான வழக்கு டிச.,6க்கு ஒத்திவைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்:தமிழக வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையை ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் டிச., 6க்கு ஒத்திவைத்தது.
2006 -- 2011 ஆண்டு தி.மு.க., ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகம் சொத்து சேர்த்ததாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கிலிருந்து கடந்த ஆண்டு சாத்தூர் ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரித்து மீண்டும் வழக்குகளை முதன்மை மாவட்ட நீதிமன்றம் மறு விசாரணை செய்ய உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து டில்லி உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் தரப்பில் இடைக்கால தடை உத்தரவு வாங்கப்பட்டது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது டிச., 6க்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் உத்தரவிட்டார்.