போதை நண்பர்களால் இளைஞர் கொலை ஓராண்டுக்கு பின் துப்பு துலங்கியது
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில் போதை நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்துக் கொலை செய்த இருவரை ஓராண்டுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் சம்பை கிராமத்தை சேர்ந்த நாகு மகன் விஜயகுமார் 40. இதே கிராமத்தைச் சேர்ந்த இவரது நண்பர்கள் முத்துக்குமார் 24, சஞ்சய் 20. மூவரும் 2023 நவ.20ல் சம்பை வடக்கில் அடர்ந்த காட்டிற்குள் மது அருந்தினர். போதையில் மூவருக்குள் ஏற்பட்ட தகராறில் முத்துக்குமார், சஞ்சய் இருவரும் விஜயகுமாரை அடித்துக் கொலை செய்தனர்.
இக்கொலையை மறைக்க அப்பகுதியில் ஆட்கள் செல்ல முடியாத காட்டுக்குள் உடலை வீசிவிட்டு ஒன்றும் நடக்காதது போல் ஊருக்குள் வந்தனர். விஜயக்குமாரின் உறவினர்கள் முத்துக்குமார், சஞ்சயிடம் விசாரித்த போது தங்களுக்கு தெரியாது. விஜயகுமார் எங்கு சென்றான் என தெரியவில்லை என நாடகமாடினர். மகனை காணவில்லை என ராமேஸ்வரம் டவுன் போலீஸ் நாகு புகார் அளித்தார். தனிப்பிரிவு போலீசார் விசாரித்தும் தெரியவில்லை.
இந்நிலையில் தீபாவளியன்று முத்துக்குமார், சஞ்சய் மற்றும் நண்பர்கள் சிலருடன் மது போதை உற்சாகத்தில் விஜயகுமாரை கொலை செய்ததை உளறினர்.
இதையறிந்த தனிப்பிரிவு போலீசார் முத்துக்குமார், சஞ்சய் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது விஜயகுமாரை வீசிய இடத்திற்கு சில நாட்களுக்கு முன் சென்று பார்த்தபோது சில எலும்பு துண்டுகள் கிடந்ததாகவும் அவற்றை கடலில் வீசியதாகவும் கூறினர்.
இருவரையும் கைது செய்த போலலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று விஜயகுமாரின் முதுகு தண்டுவட எலும்பு, கழுத்தில் அணிந்திருந்த வெள்ளி செயினை கைப்பற்றினர். தொடர்ந்து கொலையாளிகள் இருவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.