மதுவுக்கு அடிமையான மாணவர்கள் மூவர் மாயம்
திருச்சி:திருச்சி தெப்பக்குளம் பகுதியில், பிஷப்ஹீபர் அரசு உதவிபெறும் பள்ளி செயல்படுகிறது. மிகவும் பழமையான இந்த பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மூன்று மாணவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர்களில் ஒரு மாணவருக்கு, மது பழக்கத்தில் இருந்து விடுதலை அளிக்கும் போதை மறுவாழ்வு மையத்தில் வைத்து, அவரது குடும்பத்தினர் சிகிச்சை அளித்துள்ளனர். அதன் பின், தீபாவளி விடுமுறைக்கு பின், அந்த மாணவர் பள்ளிக்கு மீண்டும் சென்றார்.
கடந்த 6ம் தேதி இரவு, இரண்டு மாணவர்களுடன் அந்த மாணவர் மாயமானார். அந்த இரு மாணவர்களும், மது போதைக்கு அடிமையானவர்கள் என கூறப்படுகிறது. மூன்று மாணவர்களின் பெற்றோர் புகாரின்படி, பாலக்கரை போலீசார், அந்த மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு படிக்கும், 15 வயது மாணவர்கள், மது போதைக்கு அடிமையாகி, வீட்டை விட்டு வெளியேறியது, பள்ளி மாணவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.