இளம் வாக்காளரே... பட்டியலில் பெயர் சேர்த்தீர்களா?
திருப்பூர் ; வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் வரும் 28ம் தேதியுடன் முடிவடைகிறது. இன்னும் 19 நாட்களே உள்ளன. இளம் வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்க்க உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும்.
கடந்த அக். 29ல் வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு, சுருக்கமுறை திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. வரைவு பட்டியலில், 23 லட்சத்து 82 ஆயிரத்து 820 வாக்காளர் உள்ளனர்.
மாநகராட்சி அலுவலகம், டி.ஆர்.ஓ., அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்களில், பொதுமக்கள் பார்வைக்காக வரைவு பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.
சுருக்கமுறை திருத்தத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான விண்ணப்பங்கள், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களில் நேரடியாகவும்; ஆன்லைனிலும் பெறப்பட்டு வருகின்றன.
வரும் ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியாகும் இளம் வாக்காளர் அனைவரையும் தவறாமல் பட்டியலில் இணைக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முனைப்புகாட்டி வருகின்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து அடுத்தடுத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.
நான்கு சிறப்பு முகாம்
பணிக்கு செல்வோர் வசதிக்காக இம்மாதம் நான்கு விடுமுறை நாட்களில், மாவட்டத்திலுள்ள 2,536 ஓட்டுச்சாவடி மையங்களிலும், சுருக்கமுறை திருத்தத்துக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
அந்தவகையில், வரும் 16, 17 தேதிகள் மற்றும் 23, 24 தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில், ஓட்டுச்சாவடி மையங்களுக்கு சென்று, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தத்துக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.
போட்டிகள் துவக்கம்
அடுத்தாண்டு (2025) ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தேர்தல் பிரிவு சார்பில், திருப்பூர் மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான சுவர் ஓவியம் தீட்டுதல், வினாடி - வினா, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றிபெறுவோர், 15 மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதிபெறுவர். மண்டல அளவில் வெற்றிபெறுவோர், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான தேசிய வாக்காளர் தின போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர். மாநில அளவிலான போட்டியில் வெற்றிபெறுவோருக்கு, ரொக்க பரிசு மற்றும் சான்று வழங்கப்படும்.