தேனியில் டி.என்.பி.எஸ்.சி., தொழில்நுட்ப தேர்வு இன்று 972 பேர் பங்கேற்க அனுமதி
தேனி : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு இன்று தேனி மாவட்டத்தில் இரு கட்டங்களாக நடக்க உள்ளன.
தேனி நாடார் சரஸ்வதி ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் வளாகத்தில் இத்தேர்வு மையங்கள் உள்ளன.
காலையில் 671 பேரும், மாலையில் 301 பேரும் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளன. 20 தேர்வர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
முதற்கட்ட தேர்வானது ஓ.எம்.ஆர்., சீட் மூலம் பதிலளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதற்கு பின் நவ., 11 முதல் 16 வரை கணினி மூலம் அடிப்படை தேர்வுகளாக நடத்தப்பட உள்ளன.
இன்று நடக்கும் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலம் மற்றும் கணக்குத்துறை பாதுகாப்பு அறையில் நேற்று வைத்து, உதவி கருவூலத்துறை அலுவலர் வாசியம்மாள் முன்னிலையில் டி.என்.பி.எஸ்.சி., பிரிவு அலுவலர் இளம்பரிதி, தேனி தாசில்தார் சதீஸ்குமார் மற்றும் போலீசார் முன்னிலையில் அறைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
பாதுகாப்பு அறையில் ஓ.எம்.ஆர்., வினாத்தாள் பெட்டிகள் சுழற்சி முறையில் அடுக்கி வைக்கும் பணிகள் நடந்தன.