1,350 குடும்பங்களுக்கு மனை ஒப்படைக்கும் பணி துவக்கம்

திருச்சி:திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்குளத்தில், 1,500 பேருக்கு அரசின் இலவச மனை வழங்க, கடந்த ஜனவரி மாதம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. எனினும், பயனாளிகளுக்கு வீட்டு மனை ஒப்படைக்கப்படவில்லை.

பட்டா வழங்கி, 10 மாதங்கள் ஆகியும், மனை ஒப்படைக்கப்படாதது குறித்து, நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து சுறுசுறுப்பான வருவாய் துறை அதிகாரிகள், நேற்று பட்டா பெற்ற அனைவரையும் மனை வழங்கவுள்ள இடத்துக்கு, எல்லை கல்லுடன் வருமாறு கேட்டுக் கொண்டனர். 500க்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

அவர்களுக்கு மனையை அளந்து கொடுக்கும் பணியில், வருவாய் துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அரசின் இலவச பட்டா மனையை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனியாகவும், மற்ற சமூகத்தினருக்கு தனியாகவும், முஸ்லிம்களுக்கு தனியாகவும் பிரித்து, வருவாய் துறை அதிகாரிகள் கொடுக்க உள்ளனர்.

ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை களைய சமத்துவபுரம் கொண்டு வந்த தி.மு.க., ஆட்சியில், அரசின் இலவச நிலத்தை வழங்க ஜாதி ரீதியாக பிரிப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக, பயனாளிகள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.

Advertisement