பி.ஏ.பி., நீர் நிர்வாகத்தில் குளறுபடி; விவசாயிகள் சங்கம் ஆதங்கம்
திருப்பூர் ; பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர்பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:
பி.ஏ.பி., நீர் மேலாண்மையில் நடந்து வரும் குழப்பத்தால், ஆயக்கட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.
சட்ட விதிகளின் படி, அணைகளில் நீர்மட்டம் திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில், 14 நாட்களுக்கு ஒரு சுற்று, மாதம் இரண்டு சுற்று என, ஆண்டுக்கு, 9 சுற்றுக்கு மேல் பாசனத்திற்கு நீர் திறந்துவிடப்பட வேண்டும்.
ஆனால், நீர் நிர்வாகத்தில் தொடரும் குளறுபடியால், சுற்றுகளின் எண்ணிக்கை குறைந்தது மட்டுமின்றி, சமச்சீர் பாசனமும் கடைபிடிக்கப்படுவதில்லை. 14 நாளில் முடிக்கப்பட வேண்டிய ஒரு சுற்று, தற்போதைய நிலவரப்படி, கிட்டத்தட்ட, 30 நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
கடந்த இரு ஆண்டாக இதேநிலை தான் நீடிக்கிறது. கடந்த இரு ஆண்டுக்கு முன், ஒரு மண்டலத்திற்கு, 5 சுற்று தண்ணீர் தாரளமாக கொடுக்கப்பட்டது.
பி.ஏ.பி., தொகுப்பு அணைகள் பலமுறை, அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டது. அதாவது, 7 டி.எம்.சி., தண்ணீர் கணக்கில் வராமல் திறந்துவிடப்பட்டிருக்கிறது. இதுபோன்று மிகுதியான மழை நீர் வெளியேற்றம் என்பது ஒவ்வொரு ஆண்டும் நிகழாது; இயற்கை, அவ்வப்போது கொடுக்கும் இதுபோன்ற வாய்ப்பை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும்.
பல்லடம், பொங்கலுார், குண்டடம், காங்கயம், வெள்ளகோவில் பகுதிகளில் இன்னும் மழை பற்றாக்குறையாக தான் இருக்கிறது. எனவே, 5 சுற்று தண்ணீர் வழங்க வேண்டும். நீர்பாசன விவகாரத்தில் திட்டக்குழு மற்றும் பகிர்மானக்குழு உறுப்பினர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இதுகுறித்து, பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது, இதுதொடர்பாக கலந்தாய்வு நடத்தப்படும் எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.