'தென்னை நார் தொழிலை ஊக்குவிக்க சிறப்பு திட்டம்'

திருப்பூர் ; ''தென்னை நார் தொழிலை ஊக்குவிக்க, அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது'' என, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் தாராபுரம், வெங்கிபாளையம் மற்றும் பல்லடம் சின்னிய கவுண்டம்பாளையம் பகுதிகளில் மாவட்ட தொழில் மையத்தின் வாயிலாக, அரசு மானியத்துடன் தொழில் கடன் பெற்று செயல்பட்டு வரும் நிறுவனங்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் நேற்று முன்தினம் பார்வையிட்டார்.

அவர் கூறியதாவது;

கோவை மாவட்டத்தில் தென்னை மரங்கள் அதிகளவில் இருப்பதால், 'காயர்' தொழில் மிக முக்கிய பங்காற்றுகிறது. இதன் வாயிலாக, பல்வேறு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரும் நேக்கில், 2,186 கோடி ரூபாய் மதிப்பில் தென்னை நார் ஏற்றுமதி செய்து, 5,368 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.

தென்னை நார் தரத்தை உறுதிப்படுத்த, 4 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த பரிசோதனைக்கூடம் அமைப்பதற்கான பணி நடைபெற்று வருகிறது.மழைக்காலங்களில் தென்னை நார் உலர்த்துவது, தொழிற்சாலைகளுக்கு மிக கடினமானதாக இருப்பதால், உலர்க்களம் அமைப்பதற்கு, 8.45 கோடி ரூபாய் மதிப்பிலும், 2.15 கோடி ரூபாய் மானியத்தில், 13 உலர்கலங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேராவூரணி, பொள்ளாச்சி, உடுமலை, குண்டடம், கே.பரமத்தியில், 42.38 கோடி ரூபாய் மதிப்பில் கயிறு குழுமங்கள் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement