உயரமில்லா கீழ்மட்ட பாலம் அமைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு
மயிலாடுதுறை:விழுப்புரம்- - நாகை இடையே 180 கி.மீ.,க்கு 6,000 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டத்தில், கொள்ளிடம்- - சூரக்காடு மற்றும் சூரக்காடு -- தரங்கம்பாடி இடையே இரு பகுதிகளாக நான்கு வழிச்சாலை பணி நடைபெறுகிறது.
கொள்ளிடம் முதல் சூரக்காடு வரை பணிகள் நிறைவடைந்த நிலையில், சூரக்காடு முதல் தரங்கம்பாடி வரை சாலை அமைக்கும் பணி, மந்தகதியில் நடந்து வருகிறது.
இப்பணியை டில்லியைச் சேர்ந்த வில்ஸ்பன் நிறுவனம் மற்றும் எஸ்.பி.எல்., நிறுவனம் செய்கின்றன.
இந்நிலையில், தென்னலக்குடி- வைத்தீஸ்வரன்கோவில் இடையே கிராம சாலையின் குறுக்கே நான்குவழிச் சாலைக்கான உயரம் குறைவாக, சப்வே எனும் கீழ்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
இதனால் அறுவடை இயந்திரங்கள், விவசாய பயன்பாட்டிற்கான வாகனங்கள், பஸ் மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால், கீழ்மட்ட பாலத்தின் உயரத்தை அதிகரித்து மேல்மட்ட பாலமாக அமைக்க வேண்டி, அப்பகுதி மக்கள் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று கீழ்மட்ட பாலம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சாலை பணியை மேற்கொண்டுள்ள எஸ்.பி.எல்., நிறுவன அதிகாரிகள், பாலம் பணி தொடரட்டும். உயர் அதிகாரிகளிடம் பேசி உயரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர்.
பொதுமக்கள் ஏற்க மறுத்து, அதிகாரிகளிடம் பேசி, பணியை துவக்குமாறு கூறினர்.
வேறு வழியின்றி, பாலம் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.