நிதி ஒதுக்கியும் துவங்காத கலெக்டர் அலுவலக பால பணிகள்

விருதுநகர் : விருதுநகரில் கலெக்டர் அலுவலக பாலம் அமைக்க நிதி ஒதுக்கி 5மாதங்கள் ஆகியும் தற்போது வரை பணிகள் எதுவும் துவங்காமல் உள்ளது. நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவதால் மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.


விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன் நான்கு வழிச்சாலை உள்ளது. ஆயிரக்கணக்கில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதை கடக்க தினசரி அரசு ஊழியர்கள், மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.


இந்நிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பும், சாத்துார் படந்தால் விலக்கு நான்குவழிச்சாலையிலும் பாலம் அமைக்க 2009ல் திட்டமிடப்பட்டது. அதற்கு பின் பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.

ஆட்சி மாற்றத்தால் 2021 வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் 2021ல் தி.மு.க., பொறுப்பேற்றதும் வருவாய்த்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சாத்துார் ராமச்சந்திரன் கலெக்டர் அலுவலகம் முன் விரைவில் பாலம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.

அதன் பின் 2022 மார்ச்சில் மண் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்நிலையில் டெல்லிக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டு சோதிக்கப்பட்டன. அடுத்தப்படியாக பால வடிவமைப்பு, திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் 6 மாதமாக பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் ஒப்புதல் இப்போது வந்து விடும், விரைவில் வந்து விடும் என கூறிக் கொண்டே இருந்தனர். ஆனால் வரவில்லை. 2 ஆண்டுகள் கழித்து 2024 ஜூனில் தான் நிதி ஒதுக்கப்பட்டதாக சட்டசபையில் எம்.எல்.ஏ., சீனிவாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நிதி ஒதுக்கி 5 மாதங்கள் கடந்தும் தற்போது வரை கட்டுமான பணிகள் எதுவும் துவங்கப்படாமல் உள்ளது. எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என எதுவும் தெரியாத சூழல் உள்ளது.

இப்பணியை துவங்குவதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏன் தாமதம் செய்கிறது என தெரியவில்லை.

தற்போது புதிய கலெக்டர் அலுவலகம் திறக்கப்பட உள்ளதாலும், வெளியிடங்களில் உள்ள பல அரசு அலுவலகங்கள் புதிய கட்டடத்திற்குள் வர உள்ளதால் வரும் நாட்களில் இன்னும் மக்கள், ஊழியர்கள் நடமாட்டம் அதிகரிக்கவே வாய்ப்புள்ளது. எனவே பால பணிகளை விரைந்து துவங்குவது மட்டும் தான் இதற்கு தீர்வு.

Advertisement