பூமாலையில் விழுந்தது சிக்கல்; மகளிர் கடைகளுக்கு பூட்டு; 20 லட்சம் மின்கட்டண பாக்கி
மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் எதிரே பூமாலை வணிக வளாகத்தில் 24 கடைகள் உள்ளன. இதில் 16 கடைகளில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.
இவ்வணிக வளாகத்தை ஊரக உள்ளாட்சித்துறை நிர்வகித்து வருகிறது. இவற்றை மகளிர் திட்ட அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்வர்.
சில நாட்களுக்கு முன் கடைகளை ஆய்வு செய்த அலுவலர்கள் 2 கடைகளுக்கு பூட்டுப்போட்டனர். மறுநாள் கடைக்கு வந்த மகளிர் குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதில் தாய் மகளிர் குழு என்ற பெயரில் பத்து பேர் இணைந்து ஒரு கடை பெற்று வியாபாரம் செய்கின்றனர்.
இங்கு தையல், எம்ப்ராய்டரி வேலை, இலவச பயிற்சி அளிப்பது, பணியாரம், நகை செய்வது என செயல்படுகின்றனர். சென்னை, பெங்களூரு உட்பட பல இடங்களிலும் தங்கள் பொருட்களை கண்காட்சி நடத்தி விற்பனை செய்வதும் உண்டு. இக்குழுவின் தலைவி சுபா. இவர் டெய்லரிங் பயிற்சி அளிப்பது உட்பட துணி வியாபாரம் செய்கிறார். இவரது கடைக்கும் பூட்டுப் போட்டதாக வேதனை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இங்குள்ள கடைகள் திறப்பதை தினமும் வாட்ஸ் ஆப்பில் படம் எடுத்து பதிவு செய்ய வேண்டும். சில நாட்களாக எனக்கு கைவிரல்களில் பாதிப்பு ஏற்பட்டதால் கடையை திறக்கவில்லை. கடந்த அக்.25 முதல் தீபாவளி வரை அவ்வப்போது கடைக்கு வந்தேன். இதுகுறித்து அதிகாரிகளிடமும் தெரிவித்து விட்டேன். ஆனாலும் எனது கடையை பூட்டியதால் வியாபாரம் செய்ய இயலவில்லை.
இதேபோல எனது கடை அருகே மாற்றுத் திறனாளி ஒருவரின் கடையையும் பூட்டிவிட்டனர். நடவடிக்கை குறித்து எங்களுக்கு நோட்டீஸ் அளிக்கவோ, விளக்கம் கேட்கவோ இல்லை.
திடீரென பூட்டியதால் அவமானப்படுத்தியது போல் உள்ளது. உதவி கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளேன், என்றார்.
மகளிர் திட்ட உதவி அலுவலர் ஜெயராஜிடம் கேட்டபோது, ''அந்த 2 கடைகளும் நீண்ட நாட்களாக திறக்கவே இல்லை. இங்குள்ள கடைகளுக்கு மின் கட்டணத்தை அரசே செலுத்துகிறது.
அவ்வகையில் மின்வாரியத்திற்கு ரூ.20 லட்சத்திற்கு மேல் பாக்கி உள்ளது.
மாற்றுத்திறனாளி ஒருவரின் கடை பல மாதங்களாக திறக்கவே இல்லை. இதனால்தான் கடைகளுக்கு பூட்டுப் போடப்பட்டது'' என்றார்.