வழக்கு தொடர்ந்தவரே தன் வழக்கறிஞரை வெட்டி கொலை செய்து எரித்த சம்பவம் தம்பி உட்பட மேலும் 4 பேர் கைது

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வழக்கு தொடர்ந்தவர் தன் வழக்கறிஞரையே வெட்டி கொலை செய்து எரித்த சம்பவத்தில் தம்பி உட்பட மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகர்கோவில் அருகே பீமநகரியைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து 31. இவரது குடும்ப சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

தன் தரப்பில் வாதாட தக்கலை அருகே முட்டை காடு சரல்விளையைச் சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபியை 55, இசக்கிமுத்து நியமித்திருந்தார்.

இவ்வழக்கை அவர் சரிவர நடத்தவில்லையோ என்ற சந்தேகத்தில் கிறிஸ்டோபர் சோபியிடம் தன் சொத்து பத்திரங்கள் உள்ளிட்ட வழக்கு ஆவணங்களை திரும்ப தர கூறியுள்ளார். ஆனால் வழக்கறிஞர் காலம் கடத்தி வந்தார். இந்நிலையில் வாழைக்கன்றுகள் வாங்க இசக்கிமுத்துவை சந்திக்க பீமநகரிக்கு வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி வந்தார்.

அங்கு வழக்கு ஆவணங்கள் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த இசக்கிமுத்து கிறிஸ்டோபர் சோபியை அரிவாளால் வெட்டி கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தார்.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில் இசக்கி முத்து ஆரல்வாய் மொழி போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். இக்கொலையை இசக்கிமுத்துவால் மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை என கருதிய போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். இதில் இசக்கிமுத்து சகோதரர் தளவாய் 26, நண்பர்கள் வன்னியபெருமாள் 26, ஐயப்பன் 26, உறவினர் திண்டுக்கல் பாண்டி 26, ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.

வழக்கறிஞர் கொலையை கண்டித்து மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களையும் புறக்கணித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement