முதல்வர் மருந்தகத்திற்கு நவ.20க்குள்இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.


அவர் கூறியதாவது: பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க செய்யும் நோக்கில், மாநில அளவில் 1000 முதல்வர் மருந்தகம் திறக்கப்பட உள்ளன. இந்த மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளோர் பார்மசிஸ்ட் படிப்பில், பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.


மருந்தகம் அமைக்க விருப்பம் உள்ளோர் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் நவ.,20 க்குள் பதிவு செய்ய வேண்டும். மருந்தகத்திற்கு விண்ணப்பித்தோரிடம் 110 சதுர அடிக்கு குறையாமல் சொந்த அல்லது வாடகை இடம் இருக்க வேண்டும்.


சொந்த இடமாக இருந்தால் அதற்கான சொத்து, குடிநீர் வரி, மின் இணைப்பு ரசீது, வாடகை இடமாக இருந்தால் இட உரிமையாளரிடம் ஒப்பந்த பத்திரம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.


முதல்வர் மருந்தகம் அமைக்க ரூ.3 லட்சம் மானிய தொகை, இரண்டு தவணையாக வழங்கப்படும்.


தொழில் துவங்க, உட்கட்டமைப்பு, ரேக்குகள், குளிர்சாதன பெட்டி, ஏ.சி., மற்றும் மருந்துகள் வைப்பதற்கான பெட்டிகள் நிறுவப்பட்ட உடன், இறுதி கட்ட மானியம் வழங்கப்படும், என்றார்.

Advertisement