தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் சானடோரியத்தில் நான்கு மாடிக்கு அடிக்கல்
தாம்பரம்:தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், செம்பாக்கம், திருநீர்மலை, பெருங்களத்துார், பீர்க்கன்காரணை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம் ஆகிய, 10 உள்ளாட்சிகளை கொண்டு, தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
இந்த மாநகராட்சி, ஐந்து மண்டலங்கள், 70 வார்டுகளை கொண்டுள்ளன. மாநகராட்சிக்கான கட்டடம் இல்லாததால், தாம்பரம் நகராட்சியாக இருந்தபோது அமைக்கப்பட்ட அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
பல்வேறு பணிகளுக்காக வருவோர், அதிகாரிகளை சந்திக்கவோ, ஓய்வெடுக்கவோ, இயற்கை உபாதைகளை கழிக்கவோ, வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.
பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையில், சானடோரியம் காசநோய் மருத்துவமனை வளாகத்தில், வெளி நோயாளிகள் பிரிவு இயங்கிய இடத்தில், 4.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில், மாநகராட்சி புதிய கட்டட பணிக்கு, அமைச்சர் நேரு நேற்று, அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பரசன், ஸ்ரீபெரும்புதுார் எம்.பி., - டி.ஆர்.பாலு, எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, ராஜா, தாம்பரம் கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது, அமைச்சர் நேரு கூறியதாவது:
புதிய கட்டடம், 18 மாதங்களில் கட்டி முடிக்கப்படும். இதற்காக, 43.40 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியுடன், சுற்றியுள்ள பகுதிகளையும் இணைக்க பேச்சு நடந்து வருகிறது. அதனால், இது பெரிய மாநகராட்சியாக அமையும். உள்ளாட்சி தேர்தலுக்கு இரண்டு ஆண்டு உள்ளது. அதற்குள் விரிவாக்கம் செய்யப்படும்.
மழை பெய்து, செம்பரம்பாக்கம் ஏரி உள்ளிட்ட சுற்றுவட்டார ஏரிகள் நிரம்பினால்தான், சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக கட்டப்பட உள்ள மாநகராட்சி கட்டடம், நான்கு மாடிகளை உடையது. முதல் மாடியில், மேயர், துணை மேயர், கமிஷனர் மற்றும் துணை கமிஷனர் அலுவலகங்கள் அமையவுள்ளன. இரண்டாவது மாடியில் பொறியில் பிரிவு, மூன்றாவது மாடியில் பொது பிரிவு மற்றும் நான்காவது மாடியில் பொறியியல் அதிகாரிகள் அலுவலகம் ஆகியவை அமையவுள்ளன.