கந்தசுவாமி கோவில் வாகன நிறுத்தத்தில் கான்கிரீட் தளம் அமைக்க வலியுறுத்தல்
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு, விடுமுறை, சுபமுகூர்த்தம், கோவில் விழா நாட்களில், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அதேபோல், கோவில் நான்கு மாடவீதிகளில் உள்ள திருமணம் மண்டபங்களில் நடக்கும் திருமணங்களுக்கும், பொதுமக்கள் வருகின்றனர்.
கோவில் மற்றும் திருமண மண்டபங்களுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நான்கு மாடவீதி சாலை ஓரங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
எனவே, ஓரளவிற்கு வாகன போக்குவரத்து இடையூறை தவிர்க்க, கந்தசுவாமி கோவில் நிர்வாகம் சார்பில், தெற்கு மாடவீதியில் இடத்தை ஒதுக்கி, கட்டண வாகன பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதில், தற்போது உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, கோவிலுக்கும் வரும் பக்தர்கள், திருமண மண்டபங்களுக்கு வரும் பொதுமக்கள், தங்களது வாகனங்களை கட்டணம் செலுத்தி நிறுத்தி வருகின்றனர்.
வாகன பார்க்கிங் இடம், மண் தளமாக உள்ள நிலையில், மழை காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. இதனால், வாகனங்களை நிறுத்த மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, கோவில் நிர்வாகம் ஆய்வு செய்து, இந்த பார்க்கிங் இடத்தில் கான்கிரீட் தரைத்தளம் அல்லது இன்டர்லாக் கற்கள் அமைத்து சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.