கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள்; அடைக்கலம் கொடுப்பதை ஒப்புக்கொண்டார் பிரதமர் ட்ரூடோ!

44

ஒட்டாவா: 'கனடாவில் காலிஸ்தானியர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை' என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.


காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. கனடா அரசு, இந்தியா மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது என மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.


'காலிஸ்தானியர்களுக்கு ஆதரவாக கனடா அரசு செயல்பட்டு வருகிறது. இந்திய தூதரக அதிகாரிகளுக்கு காலிஸ்தானியர்கள் மிரட்டல் விடுப்பதை கனடா அரசு வேடிக்கை பார்க்கிறது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் குற்றம் சாட்டி இருந்தார்.



இந்நிலையில், ஒட்டாவாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது: கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்கள் ஒட்டு மொத்த சீக்கிய சமூகத்தை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. கனடாவில் மோடி அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் உள்ளனர்.

ஆனால் அவர்கள் ஒட்டுமொத்த ஹிந்து கனேடியர்களை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை. இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ பேசினார். கனடாவில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் இருப்பதை ட்ரூடோ ஒப்புக்கொண்டார். கனடா அரசாங்கம் காலிஸ்தானியர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டை இது உறுதிப்படுத்துவதாக உள்ளது.

Advertisement