விவசாய பணிக்கு ஆட்கள் கிடைக்காமல் தவிப்பு களை எடுக்க முடியாமல் விவசாயிகள் கவலை
பொன்னேரி:மீஞ்சூர் ஒன்றியத்தில் களைப்பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் தவித்து வருவதுடன், உள்ளூர் தொழிலாளர்கள் நுாறுநாள் பணிகளில் ஆர்வம் காட்டுவதால், நெற்பயிர்கள் வளர்ச்சி பாதித்து வருவதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் சொர்ணவாரி, சம்பா ஆகிய பருவங்களில், 46,,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.
கோளூர், திருப்பாலைவனம், காட்டூர் ஆகிய குறுவட்டங்களில் உள்ள, 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பு காரணமாக மழையை மட்டும் நம்பி ஆண்டுக்கு ஒரு முறை சம்பா பருவத்தின்போது நெல் பயிரிடப்படுகிறது.
இந்நிலையில், கடந்த, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நேரடி நெல் விதைப்பு, நாற்றாங்கால் நடவு மற்றும் இயந்திர நடவு முறைகளில் விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது, 30,300 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்பட்டு, அவ்வப்போது பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் சீரான வளர்ச்சியில் உள்ளன.
அதேசமயம், நெற்பயிர்களில் களைகள் அதிகரித்து, அடுத்தகட்ட வளர்ச்சியை தடுத்து வருகின்றன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டிய நிலையில் போதிய விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
களைப்பணிகளுக்காக, விவசாயிகள் கிராமம் கிராமமாக சுற்றி வருகின்றனர். வழக்கமாக களைப்பணிகளில் ஈடுபடும் பெண் தொழிலாளர்கள், நுாறுநாள் பணிகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நெற்பயிர்களின் வளர்ச்சி பாதிக்கும் சூழலில் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:
விவசாயத்திற்கு நடவு, களை, மருந்து தெளிக்க என அனைத்து பணிகளுக்குமே இங்கு விவசாய தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. நடவுப்பணிகளுக்கு ஆந்திரா, மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களை நம்பி இருக்கிறோம். அறுவடைக்கு இயந்திரங்கள் இருப்பதால் சிரமம் இல்லை.
அதே சமயம் களை எடுப்பதற்கு உள்ளூரில் தான் ஆட்கள் தேட வேண்டி உள்ளது. அவர்கள் நுாறுநாள் பணிகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நுாறுநாள் பணி எளிதாக இருப்பதாகவும், சிறிதுநேரம் பணி செய்துவிட்டு ஓய்வு எடுக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
ஒரு சில இடங்களில் குளம், கால்வாய் வெட்டும் பணிகளை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் செய்துவிட்டு, நுாறுநாள் பணியில் செய்ததுபோல் கணக்கு காண்பிக்கின்றனர்.
நுாறுநாள் பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தும் செய்து பொக்லைன் இயந்திரத்திற்கு வாடகை கொடுக்கப்படுகிறது. இதனால் வேலை செய்யாமலேயே சம்பளம் கிடைப்பதால் நுாறுநாள் பணியாளர்கள் அதில் கூடுதல் ஆர்வம் காட்டுகின்றனர்.
நுாறுநாள் பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்து வருகிறோம். இதன் வாயிலாக தொழிலாளர்களுக்கு இரட்டை கூலி கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.
குறைந்தபட்சம் களை, நடவு பணிகல் மேற்கொள்ளும் நேரத்திலாவது, அந்தந்த கிராமங்களின் நிலைக்கு ஏற்ப நுாறுநாள் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் அது குறித்து நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது நெற்பயிர்களில் களை வளர்ந்து, அவற்றை அகற்ற முடியாமல் தவித்து வருகிறோம். களைகள் அதிகரித்து பயிர்கள் முழுமையாக பாதிக்கும் நிலையே இருக்கிறது. இதனால் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக மாறி உள்ளது.
மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.