காசாவில் போர் நிறுத்தம்: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
புதுடில்லி: 'காசாவில் போர் நிறுத்தத்தையும், பாலஸ்தீன பிரச்னைக்கு இருதரப்பு தீர்வையும் இந்தியா ஆதரிக்கிறது' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
டில்லியில் பாதுகாப்பு, சமூக மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கான குழுவின் 2வது கூட்டம் நடைபெற்றது. அப்போது சவூதி அரேபியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் உடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினர்.
அப்போது, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு, கலாசாரம் மற்றும் தூதரக விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் ஜெய்சங்கர் கூறியதாவது: வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவை இரு நாடுகளின் கூட்டாண்மையில் முக்கிய தூண்களாக உள்ளன. மேற்கு ஆசியாவில் நிலைமை ஆழ்ந்த கவலை அளிக்கிறது. காசாவில் போர் நிறுத்தத்தையும், பாலஸ்தீன பிரச்னைக்கு இருதரப்பு தீர்வையும் இந்தியா ஆதரிக்கிறது.
வருத்தம்
போர் நிறுத்தத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது. மேற்கு ஆசியாவின் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதிலும், பொருளாதாரத்தை வளர்ச்சியை நோக்கி செல்வதிலும், இந்தியாவும், சவூதி அரேபியாவும் ஒரே நிலைப்பாட்டை கொண்டுள்ளன. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கது. காசாவில் இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.