வண்டலுார் பூங்காவில் ஆன்லைன் நுழைவு கட்டணம் கவுன்டர் மூடியதால் பார்வையாளர்கள் கடும் ஏமாற்றம்

தாம்பரம்: நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக, வண்டலுார் உயிரியல் பூங்கா உள்ளது. பூங்காவில் உள்ள, 2,400 விலங்குகள் பராமரிக்கப்படுகிறது.

நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு - 90 ரூபாய், சிறியவர்களுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.

கடந்த 2023, செப்., 9 முதல், பெரியவர்களுக்கான நுழைவு கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பார்வையாளர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், இப்பூங்காவில் நேரிடையான, கவுன்டர் கட்டண முறை ரத்து செய்து, 'ஆன்லைன்' கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது.

பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள், அங்குள்ள க்யூ.ஆர்., குறியீட்டை, 'ஸ்கேன்' செய்து, பெரியவர்கள் எத்தனை பேர்; சிறியவர்கள் எத்தனை பேர் என்பதை பதிவிட வேண்டும்.

பின், அதற்கான கட்டணத்தை, பணம் பரிமாற்ற செயலியான, 'ஜிபே, பேடிஎம்' வாயிலாக செலுத்த வேண்டும். பணம் செலுத்தியவுடன், பார்வையாளர்களின் மொபைல் போன் வாட்ஸாப் எண்ணிற்கு, டிக்கெட் அனுப்பப்படுகிறது. இந்த டிக்கெட்டை நுழைவு வாயிலில், ஸ்கேன் செய்து, பூங்கா உள்ளே செல்லலாம்.

அதிகப்படியான பார்வையாளர்கள், குடும்பத்தினருடன் வரும் இப்பூங்காவில், முறையான அறிவிப்பு எதுவுமின்றி, அவசர அவசரமாக ஆன்லைன் டிக்கெட் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பார்வையாளருக்கு பெரிதும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

Advertisement