காது கேளாதவருக்கு உதவும் கண்ணாடி

பிறவியிலேயே காது கேட்காதவர்களுக்கும், வயதாவது அல்லது பிற காரணங்களால் காது மந்தம் அடைந்தவர்களுக்கும், உதவும் வகையிலான ஒரு புது கண்ணாடியை நியூயார்க்கைச் சேர்ந்த கோர்னெல் பல்கலையில் படிக்கின்ற 25 வயது மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

காது கேட்பதில் குறைபாடு உடையவர்களால் எதிரே பேசுபவருடைய வாய் அசைவை வைத்துத் தான் என்ன பேசுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அறிந்து கொள்வதற்குப் பேசுபவரை மிகவும் கூர்மையாகக் கவனிக்க வேண்டும். இந்தச் சிரமத்தைத் தவிர்ப்பதற்காக நிர்பாய் நரங் (Nirbhay Narang) எனும் மாணவர் ஒரு கண்ணாடியை வடிவமைத்துள்ளார்.

இதைச் சாதாரண மூக்குக் கண்ணாடி போலக் கண்கள் மீது அணிந்து கொள்ளலாம். இது ஐபோன் உடன் ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட்டிருக்கும்.

எதிரே ஒருவர் பேசும் போது அவருடைய குரல் போனில் பதிவாகி அது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலமாக எழுத்தாக, மாற்றப்படும்.

இந்த எழுத்து அணிந்திருப்பவருடைய கண்ணாடியில் தெரியும்.

இதனால் தன்னிடம் பேசுபவர் என்ன பேசுகிறார் என்பதைக் கண்ணாடியில் வாசித்து அறிந்துகொள்ள முடியும். அமெரிக்காவில் மட்டும் விற்கப்படுகின்ற இந்தக் கண்ணாடி விரைவில் உலகம் முழுதும் பிரபலமாகும்.

Advertisement