25 அடி உயரத்துக்கு கட்அவுட்; இதைத்தான் விரும்புகிறாரா முதல்வர்?
சென்னை: பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் 25 அடி உயரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதியின் படத்துடன் ஆளுங்கட்சியினர் கட்அவுட் வைத்தது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் தி.மு.க.,வின் அரக்கோணம் எம்.பி., ஜெகத்ரட்சகனின் உறவினர் ஒருவரின் திருமண விழாவிற்கு முதல்வர் மற்றும் துணை முதல்வரை வரவேற்று போஸ்டர்கள் மற்றும் பிரமாண்டமாக பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. 25 அடி உயரத்தில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி சிரித்தபடி இருக்கும் கட் அவுட் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தது. இந்த பேனர்களில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், துரைமுருகன், தா.மோ.அன்பரசன் ஆகியோரின் படங்கள் இடம் பெற்று இருந்தன.
'பெரிய ஏரியில் இருந்து திருமண மண்டபம் வரை 3 கிலோ மீட்டர் தூரத்தில் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. பதாகைகளில் கட்சித் தலைவர்களின் படங்கள் மீது ஒளிரும் லைட்டுகளுக்கு அருகில் உள்ள மின்கம்பங்களில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் பெறப்பட்டது.
கட்டடங்களுக்கு அருகில் எங்கும் ஜெனரேட்டர்கள் தென்படவில்லை' என போலீசாருக்கு பகுதி மக்கள் புகார் அளித்தனர். இது பற்றி அறப்போர் இயக்கத்தினர் புகார் தெரிவித்த உடன், கட்அவுட் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதாக போலீசார் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். ஆனால், கட் அவுட்டுகள் அகற்றப்படவில்லை என்று அறப்போர் இயக்கத்தினர் மீண்டும் தெரிவித்துள்ளனர்.
பாதசாரிகள், வாகனங்களில் செல்வோர் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய பேனர்கள் மற்றும் கட் அவுட்டுகளை வைக்கக்கூடாது என்று பலமுறை நீதிமன்றங்கள் அறிவுறுத்தியுள்ளன. ஆனால், அவற்றைப் பொருட்படுத்தாமல் ஆளுங்கட்சியினர், தங்கள் விருப்பத்துக்கு கட் அவுட் வைப்பது தொடர்கிறது.
அரசு அதிகாரிகளும், கண்டும் காணாமல் இருக்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில், கட் அவுட் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்தார். அப்படி இருந்தும், சட்டவிரோதமாக கட் அவுட் வைக்கப்படுவதும், ஆளும் கட்சியினரே அதை முன்னின்று செய்வதும், அதை அரசு அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.