யமுனையை சுத்தம் செய்யும் முயற்சி: கெஜ்ரிவால் மீது துணை நிலை கவர்னர் குற்றச்சாட்டு
புதுடில்லி: யமுனையை சுத்தம் செய்யும் முயற்சிகளை, மாஜி முதல்வர் கெஜ்ரிவால் தடுத்து நிறுத்தினார் என டில்லி துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா குற்றம்சாட்டினார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:
ஜனவரி 2023ல் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுப்படி யமுனையை சுத்தப்படுத்தவும் புதுப்பிக்கவும் எனது தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தேன்.
உயர்மட்டக் குழு ஐந்து கூட்டங்களை நடத்தியதை தொடர்ந்து யமுனையை சுத்தப்படுத்தும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கியது.
இதன் அடிப்படையில், 11 கிலோமீட்டர் அளவில் படிப்படியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி சுத்தம் செய்யப்பட்டது. தண்ணீரின் தரமும் மேம்படத் தொடங்கியது.
அப்போது முதல்வராக இருந்த கெஜ்ரிவால், யமுனையை சுத்தம் செய்த பெருமை லெப்டினன்ட் கவர்னருக்கு சென்றுவிடும் என்று நினைத்தார். ஒன்பது ஆண்டுகளில் அவரால் நிறைவேற்ற முடியவில்லை
இதையடுத்து கெஜ்ரிவால் அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து, உயர்மட்டக் குழுவை அமைப்பதற்கான தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை பெற்றது.
இதன் விளைவாக, ஐந்து மாதங்களாக சுத்தப்படுத்தும் பணி ஸ்தம்பித்தது. யமுனையை சுத்தப்படுத்தும் எனது முயற்சியை நிறுத்துவதில் கெஜ்ரிவால் வெற்றி பெற்றாலும், கடந்த 16 மாதங்களில் நதியை சுத்தம் செய்ய ஒரு வேலை கூட செய்யவில்லை.
யமுனையை மாசு இல்லாததாக மாற்றுவதற்கான எனது முயற்சிகளுக்குத் தடையாக இருந்தவர்களின் சிந்தனையும் நோக்கமும் எவ்வளவு மாசுபட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.
இவ்வாறு சக்சேனா தெரிவித்துள்ளார்.