கூட்டணிக்காக வரிசையில் நிற்கவில்லை: எச்.ராஜா
மதுரை: '' கூட்டணிக்காக யாரிடமும் விண்ணப்பித்துவிட்டு காத்திருக்கவில்லை,'' என பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.
மதுரையில் நிருபர்களை சந்தித்த எச்.ராஜா கூறியதாவது: சமூக ஒழுக்கம் கெட்ட சமுதாயத்தை இந்த திராவிட மாடல் அரசு உருவாக்கி கொண்டு உள்ளது. இதுவே டாக்டர் மீதான தாக்குதலுக்கு காரணம். போலீசார் பாரபட்சமாக செயல்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து, கூட்டணிக்கு பா.ஜ.,வை அழைக்கவில்லை என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியது குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு ராஜா அளித்த பதில்: அ.தி.மு.க., கூட்டணிக்கு நாங்கள் வரிசையில் நிற்கிறோமா? எதற்காக பழனிசாமி பேசுகிறார் என தெரியவில்லை. கூட்டணி குறித்து நான் எந்த கருத்தையும் கூற மாட்டேன். பா.ஜ., மேலிடம் எடுத்த முடிவை தான் செயல்படுத்துவோம். கூட்டணிக்காக யாரிடமும் நாங்கள் விண்ணப்பித்துவிட்டு காத்து இருக்கவில்லை. கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி நீடிக்கிறது. இனிமேல் எந்த கட்சி வர வேண்டும். யாருடன் கூட்டணி என்பதை பற்றி பா.ஜ., மேலிடம் தான் முடிவு செய்யும். இவ்வாறு ஹெச்.ராஜா கூறினார்.