'நாட்டில் பணவீக்கம் அதிகரிக்க ஐந்து பொருட்களே காரணம்' மத்திய நிதித்துறை செயலர் விரக்தி

1

புதுடில்லி:ஐந்தே ஐந்து பொருட்கள், நாட்டின் பணவீக்கத்தில் பிரச்னை ஏற்படுத்துவதாக, மத்திய நிதித்துறை செயலர் துஹின் காந்த பாண்டே தெரிவித்து உள்ளார்.

டில்லியில், ஆங்கில வணிக ஊடகத்தின் சார்பில் நடைபெற்ற உலக தலைமைத்துவ மாநாட்டில் அவர் பேசியதாவது:

அரசின் எவ்வளவோ முயற்சிக்கு இடையிலும், நாட்டின் பணவீக்கம் அதிகரித்து விடுகிறது. இதற்கு ஐந்தே ஐந்து பொருட்கள் தான் முக்கியமான காரணம்.

தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய ஐந்து பொருட்கள் தான், பணவீக்கப் பிரச்னையை ஏற்படுத்துகின்றன.

நம் நாடு ஏறக்குறைய 165 கோடி பேரை கொண்டதாக இருக்கிறது. இதில், 112 கோடி பேர், வேலை பார்க்கும் வயதுடைய மக்கள்.

வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணிக்கும் நம் நாட்டின் மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில், பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு, 70 சதவீதத்துக்கு மேல் இருக்கும் என நம்புகிறோம்.

நாட்டின் வளர்ச்சி நடைக்கு எதிராக வீசும் காற்றையும் சமாளித்து, நாம் வளர்ந்தாக வேண்டும்; வளர்ந்து வருகிறோம். ஆண்டுதோறும் சரியான அளவில் பருவமழையை எதிர்பார்க்கிறோம்; அதன் வாயிலாக கிராமப்புற மக்களின் பொருளாதாரம் செழிப்புற்று, பொருட்களின் தேவையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

பொருளாதார சீர்திருத்தங்களை வெறுமனே தனியார்மயமாக்கல் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. அது உருவாக்கும் சமூக முன்னேற்றத்தையும், தொழில் செய்வதற்கு உகந்த சூழலையும் உணர வேண்டும். வர்த்தகமும், வர்த்தக கொள்கைகளும் ஒருசேர இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு துஹின் காந்த பாண்டே பேசினார்.

பணவீக்கத்தை பதம் பார்ப்பவை

தக்காளி

வெங்காயம்

உருளைக்கிழங்கு

தங்கம்

வெள்ளி

Advertisement