போர் கப்பலுக்கு முதல் பெண் கமாண்டர் சகோதரனுடன் இணைந்து புதிய சாதனை

புதுடில்லி, நம் கடற்படை வரலாற்றில் முதல்முறையாக, பெண் அதிகாரி ஒருவர் போர் கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும், இவரது சகோதரரும் ஒரே நேரத்தில் இருவேறு போர் கப்பல்களின் கமாண்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நியமனம்



நம் முப்படைகளில், பெண்கள் அதிகாரிகளாக பணி நியமனம் செய்யப்படும் நடைமுறை துவங்கி, 30 ஆண்டுகள் ஆகின்றன.

ஆனால், போக்குவரத்து, மருத்துவ பிரிவு உள்ளிட்டவற்றில் மட்டுமே அவர்கள் பணியாற்றி வந்தனர்.

அதிகாரிகள் பதவிக்கு குறைவான பணிகளில் பெண்களை முதல்முறையாக நியமனம் செய்த பெருமை, நம் கடற்படையை சேரும்.

அக்னிவீரர் திட்டத்தின் கீழ் நம் கடற்படையில், 1,000 பெண்கள் தற்போது பணியாற்றி வருகின்றனர்.

நம் கடற்படையின் போர் கப்பல்களில், நான்கு பெண் அதிகாரிகள் கடந்த 2021ல் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இதை தொடர்ந்து, 40 பெண் அதிகாரிகள் தற்போது பணியில் உள்ளனர். ஆனால் போர் கப்பலுக்கு தலைமை வகிக்கும் கமாண்டர் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டதில்லை.

இதை, பிரேர்னா தியோஸ்தலி என்ற பெண் அதிகாரி முறியடித்துஉள்ளார்.

நம் கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ்., டிரிங்கட் போர் கப்பலின் முதல் பெண் கமாண்டராக அவர் நேற்று நியமிக்கப்பட்டார்.

நம் கடற்படையில், கடந்த 2000ல் இணைந்த ஐ.என்.எஸ்., டிரிங்கட், 50 வீரர்களை கொண்டது. அந்தமான் நிகோபாரில் உள்ள ஒரு தீவின் நினைவாக, கப்பலுக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.

தாக்குதல்



கனரக இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட இந்த கப்பல், நிலப்பரப்பு தாக்குதல்களை எதிர்க்கும் திறன் உடையது. அதி வேகத்திலும், ஆழம் குறைவான பகுதிகளிலும் இயங்கும் திறன் உடையது.

இந்த கப்பலின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ள பிரேர்னாவின் சகோதரர் இஷான் தியோஸ்தலியும், நம் கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர், ஐ.என்.எஸ்., விபூதி போர் கப்பலின் கமாண்டராக நேற்று நியமிக்கப்பட்டார். சகோதரனும், சகோதரியும் ஒரே நேரத்தில் நம் கடற்படை போர் கப்பல்களின் கமாண்டர்களாக பணியாற்றுவது இதுவே முதல்முறை.

Advertisement