ஏகாம்பரநாதர் கோவில் சிலைகள் குடந்தையிலிருந்து காஞ்சிக்கு மாற்றம் செயல் அலுவலரிடம் ஒப்படைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில், உற்சவருக்கு சிலை செய்ததில், 8.7 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் இருந்து, சிவகாஞ்சி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, கும்பகோணத்தில் வைக்கப்பட்டிருந்த புதிய உற்சவர் சிலைகள், காஞ்சிபுரத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டு, கோவிலில் ஒப்படைக்கப்பட்டன.

வழக்குப்பதிவு



காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பயன்பாட்டில் இருந்த உற்சவர் சிலை தொன்மையானது. இச்சிலை, 2015ல் சேதமானதால், புதிய உற்சவர் சிலை செய்ய ஹிந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது.

அதன்படி, சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் என, இரு உற்சவர் சிலைகள் செய்யப்பட்டன. உற்சவர் சிலையை தங்கத்தில் செய்ததில் மோசடி நடந்திருப்பதாக, 2017ல் அண்ணாமலை என்பவர் அளித்த புகாரில், சிவகாஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பின் இவ்வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.

பறிமுதல்



ஹிந்து சமய அறநிலைய துறை முன்னாள் கமிஷனர் வீரசண்முகமணி, கூடுதல் கமிஷனர் கவிதா, கோவில் செயல் அலுவலர் முருகேசன், ஸ்தபதி மாசிலாமணி, கோவில் அர்ச்சகர்கள் என, 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

புதிதாக செய்யப்பட்ட சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் ஆகிய இரு சிலைகளிலும், 8.7 கிலோ தங்கம் இருக்க வேண்டும்.

ஆனால், முன்னாள் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்தியதில், இரு சிலைகளிலும் தங்கம் பயன்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, புதிதாக செய்யப்பட்ட இரு உற்சவர் சிலைகளையும் பறிமுதல் செய்து, அவற்றை கும்பகோணத்தில் உள்ள சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் வைத்திருந்தனர்.

பல ஆண்டுகளாக இவ்வழக்கு விசாரணையில் இழுபறி நீடித்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தியடைந்து, மீண்டும் சிவகாஞ்சி போலீசார் விசாரிக்க கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

அதன்படி, சிவகாஞ்சி போலீசார் இவ்வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர்.

அனுமதி



இவ்வழக்கு சிவகாஞ்சி போலீசாருக்கு மாற்றப்பட்டதால், பறிமுதல் செய்யப்பட்ட உற்சவர் சிலைகளை, சிவகாஞ்சி போலீசாரிடம் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.

அதன்படி, கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்திற்கு சோமாஸ்கந்தர் மற்றும் ஏலவார்குழலி சிலைகளை பாதுகாப்புடன் நேற்று கொண்டு வந்தனர்.

ஒப்படைப்பு



நீதிபதி வாசுதேவன் முன்னிலையில், சிலைகளை போலீசார் ஒப்படைத்தனர். அவற்றை, ஏகாம்பரநாதர் கோவிலில் பத்திரமாக வைக்க நீதிபதி அறிவுறுத்தினார்.

உடன், இரு சிலைகளையும் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் போலீசார் எடுத்து சென்றனர். அங்கு, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமியிடம் அவற்றை ஒப்படைத்தனர்.

கோவில் வளாகத்தில் உள்ள திருமேனி பாதுகாப்பு மையத்தில் இரு சிலைகளும் வைக்கப்பட்டன.

இந்த சிலைகளை, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிட முடியாது என்று போலீசார் தெரிவித்தனர்.

Advertisement