குளத்தில் கொட்டப்பட்ட குப்பை தொற்றுநோய் பாதிப்பில் மாணவர்கள்
சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆனைக்குட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே குளத்தில் குப்பையை கொட்டுவதால் மாணவர்கள் தொற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் ஆனைக்குட்டம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி அருகே குளம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குளிக்க, துணி துவைக்க என பயன்பாட்டில் இருந்தது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கியது. இந்நிலையில் தற்போது குளத்தில் குப்பை கொட்டப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும்போது கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் சிரமப்படுகின்றனர். மேலும் குளம் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியதால் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் தொற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர். கொசு தொல்லையால் வகுப்பறையில் அமர்ந்து படிக்கவும் முடியவில்லை. எனவே குளத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.