இலங்கை பார்லிமென்டில் பெரும்பான்மையை கைப்பற்றியது அனுரா கட்சி
கொழும்பு: இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் அதிபர் அனுர குமாரவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 70 சதவீத ஓட்டுக்களை பெற்று முன்னிலை பெற்றுள்ளது.
கடும் போட்டி
மொத்தம் உள்ள 225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை பார்லிமென்டுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அதிபர் அனுரா குமாராவின் தேசிய மக்கள் சக்தி கட்சி, முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் புதிய ஜனநாயக முன்னணி, முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் பொதுஜன முன்னணி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டுள்ளன. அதேபோல, தமிழர் கட்சிகளும் தனித்தனியே களம் கண்டுள்ளன.
விஸ்வரூபம்
ஓட்டுப்பதிவு முடிந்த கையோடு, ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. வழக்கம் போல அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கட்சியே, இந்த முறையும் பார்லிமென்ட் தேர்தலில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலில் வெறும் 3 இடங்களை மட்டுமே பெற்றிருந்த அதிபர் குமாராவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு இந்த முறை தனிப்பெரும்பான்மையை காட்டிலும் கூடுதல் இடங்கள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அனைத்து கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, தேசிய மக்கள் சக்தி ஒட்டுமொத்தமாக 70 சதவீத ஓட்டுக்களை பெற்று முன்னிலை வகிக்கிறது. சஜித் பிரேமதாசா தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 18 சதவீத ஓட்டுக்களுடன் 2வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி 5 சதவீத ஓட்டுடன் 3வது இடத்தையும், ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன முன்னணி 3 சதவீத ஓட்டுடன் 4வது இடத்தையும் பிடித்துள்ளது.
மோசமான நிலை
தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில் கடந்த முறை பெற்ற இடங்களில் கூட முன்னிலைப் பெறவில்லை. குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான, யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளிலும், அதிபரின் தேசிய மக்கள் சக்தி கட்சியே முன்னிலை வகிக்கிறது. யாழ்ப்பாணத்தில் இதுவரை தமிழர் கட்சிகளே முதலிடம் பெற்று வந்த நிலையில், முதல்முறையாக இந்த தேர்தலில், அதிபர் அனுராவின் தேசிய மக்கள் சக்தி கட்சி முதலிடம் பெற்றுள்ளது. அடுத்தடுத்த இடங்கள் தான் தமிழர் கட்சிகளுக்கு கிடைத்துள்ளன.
கடந்த முறை தமிழ் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை தமிழ்க் கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டதால், இந்த பின்னடைவை சந்தித்துள்ளன.
தோல்வி
இதுவரையில் முடிவு அறிவிக்கப்பட்ட 47 இடங்களில் 35 இடங்களை அதிபர் அனுரா குமாராவின் கட்சி கைப்பற்றியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஷசீந்திர ராஜபக்சே, மகிந்த அமரவீர, அரவிந்த் குமார் ஆகியோர் தோல்வியடைந்துள்ளனர்.
வரவேற்பு
தேர்தலுக்கு சில நாட்கள் முன்னதாக யாழ்ப்பாணத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிபர் அனுரா, தமிழர் பகுதிகளில் அரசுத் துறையினர் கைப்பற்றியுள்ள நிலங்கள் அனைத்தும் திரும்ப வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவு குறித்து அதிபர் அனுரா குமாரா கூறுகையில், "தேசிய மக்கள் சக்தி கட்சி தான் அரசை நடத்த வேண்டும் என்பதை இலங்கை மக்கள் முடிவு செய்திருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன," என தெரிவித்துள்ளார்.