பாரம்பரிய முழக்கம், நடனத்துடன் மசோதாவுக்கு எதிர்ப்பு; நியூசி., பார்லி.,யில் மாவோரி எம்.பி.,க்கள் நூதனம்
வெல்லிங்டன்: வைதாங்கி ஒப்பந்தத் திருத்த மசோதாவுக்கு, மாவோரி எம்.பி.,க்கள், நியூசிலாந்து பார்லிமென்டில் பாரம்பரிய முழக்கத்துடன், நடனமாடி எதிர்ப்பு தெரிவித்தனர்.
நியூசிலாந்தின் 170 ஆண்டு கால வரலாற்றில், 21 வயதான ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க் என்ற இளம் பெண் எம்.பி., ஆகி உள்ளார். மாவோரி இனத்தைச் சேர்ந்த இவரது குடும்பம் 3 தலைமுறைகளுக்கு மேல் அரசியலில் உள்ளது.
பார்லிமென்டில் அவர் மாவோரி பழங்குடியின மொழியில் தனது கன்னிப்பேச்சினை பதிவு செய்து உலக மக்களின் கவனத்தை பெற்றார்.
1840ல் பிரிட்டன் அரசு பிரதிநிதிகளுக்கும், நியூசிலாந்தின் வடக்குத் தீவில் இருக்கும் மாவோரி தலைவர்களுக்கும் இடையே வைதாங்கி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதாவது, மாவோரியர்களுக்கான சலுகைகளும், உரிமைகளையும் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய நியூசிலாந்து பார்லிமென்டில் மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டி பட்டி மவோரி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இளம் பெண் எம்.பி., ஹனா ரவ்ஹிதி மைபி கிளார்க், அந்த மசோதாவை கிழித்ததுடன், தங்களின் பாரம்பரிய முழக்கம் மற்றும் நடனமாடி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, அவரது கட்சி எம்.பி.,க்கள் நடனமாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், நியூசிலாந்து பார்லிமென்டில் பரபரப்பு உண்டாகியது. இதையடுத்து, சபாநாயகர், அவையை ஒத்திவைத்தார்.