வீடுகளுக்குள் புகும் பன்றிகள், ஓடையில் கழிவுநீர் தேக்கம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை திருவள்ளுவர் நகரில் வீடுகளுக்குள் புகும்பன்றிகள், தேங்கும் கழிவுநீர் போன்றவற்றால் மக்கள் சுகாதாரக்கேட்டில் தவிக்கின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி ஊராட்சியை சேர்ந்தது திருவள்ளுவர் நகர். இங்கு 7 தெருக்களுக்கு மேல் உள்ளது. நகர் உருவாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில் எந்தவித அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை. தெருக்களில் குப்பை சிதறி கிடக்கின்றன. குப்பைகளை அள்ள தூய்மை பணியாளர்கள் வருவது இல்லை.

குப்பைகளை கொட்ட தொட்டிகளும் வைப்பது இல்லை. ரோடு ஓரங்களில் கொட்டப்படும் குப்பையை தெரு நாய்கள் கிளறி விடுவதால் குப்பை காற்றில் பறந்து பரவிக் கிடக்கிறது. ரோடு வசதி இல்லாததால் மேடும், பள்ளமுமாக உள்ளது. மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக இருப்பதால் ரோட்டில் நடக்க முடியவில்லை. மழைநீர் குளம் போல் தெருவில் தேங்கி விடுகிறது. வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்தப் பகுதியில் உள்ள மழை நீர் வரத்து ஓடை பராமரிப்பு இன்றி அடைபட்டு கழிவுநீர் தேங்கி சுகாதார கேடாக உள்ளது. இதில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. வீடுகளில் கதவு திறந்து இருந்தால் வீட்டுக்குள் புகுந்து உணவுகளை தின்று விடுகின்றன.. தெரு நாய்களின் அட்டகாசமும் தாங்க முடியவில்லை. குடிநீர் வசதி இல்லை, ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் தண்ணீர் வரவில்லை. போதுமான தெரு விளக்குகளும் இல்லை.

பன்றிகள், நாய்கள் தொல்லை



சாமுண்டீஸ்வரி, குடும்பத் தலைவி: திருவள்ளுவர் நகரில் பன்றிகள் ,நாய்கள் கூட்டம் கூட்டமாக திரிகின்றன. வீடுகளில் கதவு திறந்திருந்தால் பன்றிகள் வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. கூட்டமாக திரியும் தெரு நாய்களை கண்டு மக்கள் பயந்து கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் பயப்படுகின்றன. தெரு நாய்கள், பன்றிகளை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர் வசதி இல்லை



அமுதா, குடும்பதலைவி: குடிநீர் வசதி இல்லாமல் காசு கொடுத்து விலைக்கு வாங்கி குடிநீரை பயன்படுத்துகிறோம். ஜல் ஜீவன் திட்டத்தில் குழாய்கள் பதிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் தண்ணீர் வரவில்லை. புழக்கத்திற்கும் தண்ணீர் இல்லை.

ரோடு, வாறுகால் அவசியம்



ரேவதி, குடும்பதலைவி: நகர் உருவாகி பல ஆண்டுகள் ஆன நிலையில் தெருக்களில் ரோடு, வாறு கால்கள் இல்லை. தெருக்களில் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது. ரோடு அமைக்காததால் தெருக்கள் குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் நடக்க முடியாத நிலையில் உள்ளது. எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

Advertisement