சிவகங்கையில் டாக்டர்கள் போராட்டம் புற நோயாளிகள் அவதி
சிவகங்கை: சிவகங்கையில் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் நடத்தியதால் 400க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சென்னை கிண்டி புற்றுநோய் முருத்துவமனையில் பாலாஜி என்ற டாக்டரை தனது தாய்க்கு முறையாக சிகிச்சையளிக்கவில்லை என கூறி விக்னேஷ் என்பவர் கத்தியால் குத்தினார்.
ஆபத்தான நிலையில் டாக்டர் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் பணி பாதுகாப்பு வழங்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு செயல்படவில்லை. சிகிச்சைக்காக பலர் காலை 7:30 மணிக்கே வந்து காத்திருந்தனர்.
புறநோயாளிகள் பிரிவில் மட்டும் 450 பேர் சிகிச்சைக்காக வந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தீவீர சிகிச்சை பிரிவில் புறநோயாளிகளாக 150 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை 45 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவக் கல்லுாரியில் அவசரகால சிகிச்சையில் மட்டும் 15 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். 150க்கும் மேற்பட்ட டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துகல்லுாரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம்
சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டர்கள் பணியை புறக்கணித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில், பொருளாளர் ராஜேஷ், இந்திய மருத்துவ சங்க தலைவர் சபரிராஜன், செயலாளர் ஜிம் திவாகர், பொருளாளர் கார்த்திக்ராஜா, இணை செயலாளர் ஜீவா உள்ளிட்ட டாக்டர்கள் மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் கலந்து கொண்டனர். காரைக்குடியிலும் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.