உணவு டெலிவரி செயலி மூலம் மது விற்பனை; பா.ம.க., அன்புமணி குற்றச்சாட்டு
கம்பைநல்லுார்: தர்மபுரியில், உணவு டெலிவரி செய்யும் செயலி மூலம், வீட்டுக்கு வீடு, மது விற்பனை நடப்பதாக வரும் தகவல் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லுாரில் நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான குடிநீர் பிரச்னையை போக்க, உபரிநீரை நீரேற்றம் செய்து ஏரிகளின் நிரப்ப வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை. அதை புரிந்து கொள்ள முடியாமல் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளார். சென்னை, கிண்டி மருத்துவமனையில், நோயாளியின் மகன் டாக்டரை தாக்கியதில் அவர் தற்போது கவலைக்கிடமாக உள்ளார். அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கிடையாது. அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அதிகம் வருகிறார்கள்.
அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். நோயாளிகளுக்கு, டாக்டர்கள் பயமின்றி உரிய சிகிச்சை அளிக்க, ஊர்க்காவல் படையினரை, அங்கேயே பணியமர்த்தி, டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். தர்மபுரி நகர பகுதியில், உணவு டெலிவரி செய்யும் செயலி மூலம், வீட்டுக்கு வீடு மது விற்பனை செய்வதாக வந்துள்ள தகவல் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். மூன்று தலைமுறை இளைஞர்களை மதுவினால் அழித்த பெருமை, ஆளும், தி.மு.க., அரசையே சேரும். இவ்வாறு, அவர் கூறினார்.