இறப்பு மற்றும் ஆன்மீகம்: ஒருவரின் இறப்பை அறிவதன் மூலம் அவருள் ஆன்மீகம் எப்படி தூண்டப்படுகிறது
இறப்பும் ஆன்மீக செயல்முறையும் எப்போதுமே இணைக்கப்பட்டுள்ளன. சத்குருவின் இந்த ஆழமான கட்டுரையில், ஒருவருக்கு இறப்பு நினைவூட்டப்படும் போது, அது அவரை ஆன்மீக பாதையில் எவ்வாறு முன்னோக்கி செல்ல வைக்கிறது என்பதை விளக்குகிறார்.
சத்குரு: ஒருவரின் இறப்பை நினைவூட்டுவது என்பது, எப்போதுமே மனிதனைப் புலன் இன்பங்களைத் தாண்டிய ஒன்றைத் தேடுவதற்கான அடிப்படை சக்தியாக இருந்து வருகிறது. நாமும் இறந்துவிடுவோம் என்பதை நினைவில் கொள்ளாதவரை, யாரும் ஆன்மீகத் தேடலில் ஈடுபடமாட்டார்கள். 65 வயதிற்குப் பிறகுதான் நீங்கள் ஆன்மீகத்தைத் தேட வேண்டும் என்ற பழமொழிகளும் தவறான புரிதல்களும் ஏன் உள்ளன? ஏனென்றால், அந்த காலகட்டத்தில் உடல் உங்களை வலுவாக நினைவூட்டுகிறது. நீங்கள் இளமையாக இருக்கும்போது, நீங்கள் அழியாதவர் என்று நினைக்கிறீர்கள். ஆனால் மெதுவாக வயதாகும்போது, நீங்கள் நிச்சயமாக இறந்துவிடுவீர்கள் என்பதை நினைவூட்டுகிறது. சிலருக்கு நினைவூட்டல்கள் ஆரம்பத்திலும், சிலருக்கு பின்னரும் கிடைக்கும். அது உங்கள் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.
இதனால்தான் சிவன் தொடர்ந்து மயானங்களில் தன் நேரத்தை செலவிட்டார் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு யோகியும் தன் வாழ்நாளில் குறிப்பிட்ட காலத்தை மயானங்களில் கழித்தனர். மயானம் மிகவும் புனிதமானதாக போற்றப்பட்டதற்கு காரணம், அது உங்கள் இறப்பை வலுவான வழியில் நினைவூட்டுகிறது. யாராவது இறந்தால், உங்கள் இருப்பின் மரண இயல்பு உங்கள் உடலில் எங்காவது உங்களைத் தாக்கும்; இது ஒரு உணர்ச்சிபூர்வமான எதிர்வினையை விட நியாயமானது.
உங்களுக்குத் தெரியாத யாரோ ஒருவர், ஒரு மனித வடிவம் இறந்து கிடப்பதைக் காணும்போது கூட அது உங்களைத் தாக்கும், இல்லையா? நீங்கள் இன்னும் கொஞ்சம் உணர்திறன் உடையவராக இருந்தால், எந்த இறந்த வடிவமும் உங்கள் உடலைத் தாக்குகிறது, மனதை இல்லை. மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் எதிர்வினைகள் இருக்கலாம், ஆனால் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உடல் அதன் சொந்த வழியில்தான் வாழ்க்கையை ஊக்குவிக்கிறது.
உடலுக்கு அதன் சொந்த நினைவுகள் உள்ளது, அது அதன் சொந்த வழியில் செயல்படுகிறது. இப்போது உங்கள் உடல் சுமக்கும் நினைவுகள், உங்கள் மனதின் நினைவுகளை விட உங்கள் மேல் அதிக ஆதிக்கம் கொள்கிறது. மனதின் நினைவுகளை விட மிகவும் முக்கியமானது உடலின் நினைவுகள்.
யோகிகள் எப்போதுமே மலைகளில் வாழத் தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால், அங்கே உடல் திடீரென்று அதன் இறப்பை வலுவாக நினைவூட்டுகிறது - இது ஒரு மன அல்லது அறிவுசார் நினைவூட்டல் அல்ல - ஆனால், அது ஒரு உடல் நினைவூட்டல். வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையிலான இடைவெளி மிகவும் குறுகிய இடம். அந்த இடம் அல்லது அந்த கோட்டின் அளவு மலைகளில் மிகவும் குறைவாக இருக்கும். மலைகளில் வாழ்வது உங்கள் இருப்பின் இடைநிலை தன்மையை தொடர்ந்து உங்களுக்கு நினைவூட்டுகிறது.
உங்களின் இறப்பின் தன்மையைப் பற்றி உணர்ந்தால், நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்பதை நீங்கள் தொடர்ந்து அறிந்திருந்தால், இது நிரந்தரமானது அல்ல என்பதை உங்கள் உடல் அறிந்திருந்தால், இந்த உடல் ஒருநாள் இந்த பூமியால் உறிஞ்சப்படப் போகிறது, அது இன்றாக கூட இருக்கலாம் - இப்போது உங்கள் ஆன்மீகத் தேடல் அலைபாயாது. அதனால்தான் யோகிகள் மலைகளைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களின் ஆன்மீகத் தேடலையும் அசைக்காதபடி அவர்களின் இறப்பை தொடர்ந்து நினைவுபடுத்த அவர்கள் விரும்பினர்.
உங்கள் உடலின் தன்மை என்ன என்பதை நீங்கள் தொடர்ந்து நினைவுபடுத்துவது மிகவும் முக்கியம். இப்போது நீங்கள் பூமியில் ஒரு சிறிய மண்மேடு. உங்கள் முழு வாழ்க்கையும் இந்த உடலமைப்பு சூழலும் இந்த பூமியின் ஒரு சிறு பகுதிதான். பூமி உங்களை உறிஞ்ச முடிவு செய்தால், நீங்கள் ஒரு சிறிய மேடாக மாறுவீர்கள்.
நீங்கள் வெறும் பூமி, வேறு ஒன்றும் இல்லை என்ற நிலையான நினைவூட்டலை யோகிகள் விரும்பினர்; அவர்கள் பூமியுடன் எப்போதும் தொடர்பில் இருக்க விரும்பினர், அதனால் அவர்கள் எப்போதும் பூமியுடன் இருப்பதை தேர்ந்தெடுத்தார்கள். பூமியால் சூழப்படுவது எப்படி? நீங்கள் ஒரு குழி தோண்டி அதில் உட்காரலாம், ஆனால் அது நடைமுறையில் சாத்தியம் இல்லை. எனவே அவர்கள் மலைகளுக்குச் சென்று அங்கு இருந்த இயற்கை துளைகளைத் (குகைகளை) தேர்ந்தெடுத்தனர். அங்கு, பூமி உங்களை மீண்டும் உறிஞ்ச முயற்சிக்கிறது என்பதை உடலுக்கு தொடர்ந்து நினைவுபடுத்துகிறது. பூமி தனது கடனை முடிந்தவரை விரைவாக திரும்பப் பெற முயற்சிக்கிறது. உயிர்வாழ்வதற்கான உங்கள் போராட்டம் அதற்கு எதிரான போராட்டம்.
ஆசிரமத்தில் நான் எப்போதும் மக்களிடம் சொல்கிறேன், நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, தினமும் நீங்கள் ஒரு மணி நேரமாவது உங்கள் விரல்களை பூமியின் தொடர்பில் இருக்கும்படி செய்யுங்கள். தோட்ட வேலை போன்ற ஏதாவது செய்யுங்கள்; எப்படியாவது உங்கள் கைகளில் சேறும் சகதியும் இருக்க வேண்டும். இது இயற்கையாக உடலில் நினைவுகளை உருவாக்கும். நீங்கள் இறக்க நேரிடும்; இது நிரந்தரமானது அல்ல என்பதை உங்கள் உடல் அறிந்துகொள்ளும். ஒருவர் தனது ஆன்மீக நாட்டத்தில் கவனம் செலுத்துவதற்கு உடலில் உள்ள உணர்தல் மிகவும் முக்கியமானது. உணர்தல் எவ்வளவு அவசரமாகிறது, அந்தளவு ஆன்மீக உணர்வு வலுவாகிறது