வேந்தன் புத்தனான கதை!

இது... புத்தனாக மாறிய வேந்தனின் வாழ்க்கைக் கதை... போதி மரத்து புத்தனின் ஞானப் பெருங்கதை... நாடி வந்த சீடர்களுக்கு ஞானம் கொடுத்த மகானின் கதை... இன்றும் நம்முள் வாழும் ஆத்மனின் அரிய கதை... அறியுங்கள்…

சத்குரு:





இந்த உலகில் எத்தனையோ ஆன்மீகக் குருமார்கள் தோன்றியிருந்தாலும், அவர்கள் எல்லாரிலும் பெருமளவில் கொண்டாடப்படுகிறவர் கௌதம புத்தர். அவர் காலத்தில் வாழ்ந்த அரசர்களும் சக்கரவர்த்திகளும் அவரது சீடர்களாயினர். இந்தியாவில் மிகப்பெரும் சக்கரவர்த்தியாக விளங்கிய அசோகர், அரியணை துறந்து திருவோடு தாங்கி புத்தர் வழியில் நடந்தார்.

ஆட்சிக் கட்டிலில் இருந்த அனேகம் பேரை புத்தர் திருவோடு ஏந்தச் செய்தார். இந்தக் காரணங்களாலேயே புத்த மார்க்கம் இந்தியாவில் ஒரு பெரும் அலையை ஏற்படுத்தியது.

பல விதங்களிலும் புத்தரின் போதனைகளை நீங்கள் சிந்தித்தால் அவை உபநிஷதங்களின் சாரமாகத்தான் உள்ளன. ஆனாலும் கலாச்சாரத்தின் தளைகளுக்குள் இருந்த அவற்றை விடுவித்து எளிமையாகவும் விஞ்ஞானப்பூர்வமாவும் வழங்கியதுதான் புத்தரின் போதனைகள் வெற்றி பெற்றமைக்கு முக்கியக் காரணம்.

ஆன்மீக அடிப்படையில் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாத பல நுண்ணிய அம்சங்களும் சக்திகளும் அவருக்கு இருந்தால்கூட அவற்றை ஒருபோதும் அவர் வெளிப்படுத்தியதே இல்லை. ஆனால் புறஉலகைப் பொறுத்தவரை தன்னை மிகவும் யதார்த்தமான மனிதராகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.

அவர் ஞானோதயம் அடைந்த பௌர்ணமி நாள்தான் புத்த பூர்ணிமா என்று குறிப்பிடப்படுகிறது. ஏறக்குறைய எட்டாண்டு காலம் தன் உடலையே பெரும்சேதத்துக்கு ஆட்படுத்துகிற விதமாக மிகக் கடுமையான ஆத்ம சாதனைகளில் அவர் ஈடுபட்டார்.

நான்காண்டு காலம் சமணா என்னும் மிகக் கடுமையான ஆத்ம சாதனைகளில் அவர் ஈடுபட்டார். சமணா என்பது உண்ணாநோன்பு இருப்பதும், யாரிடமும் உணவு கேட்காமல் நடந்துகொண்டே இருப்பதும் ஆகும். பலரும் சமணா சாதனையை செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களில் பலர் மனிதர்கள் இருக்கிற பகுதியின் வழியாக நடந்து செல்வார்கள். இவர்கள் சமணா நோன்பு நோற்பதை அறிந்து மக்கள் தாமாக உணவு படைப்பார்கள்.

ஆனால் கௌதமரோ, மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே நடந்தார். அதன் காரணமாக மரணத்தை நெருங்கும் அளவு தன் உடலை சிதைத்துக்கொண்டார். அப்போதுதான் நிரஞ்சனா என்கிற நதிக்கு அருகே வந்தார். இப்போது அந்த நதி இல்லை. அந்த நதியில் முழங்கால் அளவுதான் தண்ணீர் இருந்தது. ஆனால் வேகமாகப் பாய்ந்துகொண்டு இருந்தது. மிகவும் பலவீனமாக இருந்த கௌதமரால் அடுத்து ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியவில்லை.
அங்கே இருந்த ஒரு சிறு கிளையைப் பற்றிக்கொண்டார். அப்படியே பல மணி நேரங்கள் அவர் இருந்ததாகச் சொல்கிறார்கள். அல்லது சிறிது நேரம் இருந்திருந்தாலும்கூட, உடல் சோர்வு காரணமாகப் பல மணி நேரங்கள் கழிந்ததாகத் தோன்றியிருக்கலாம். அந்த வினாடியில்தான் அவருக்குள் ஓர் எண்ணம் பிறந்தது.

“இதற்கு வேண்டியதெல்லாம் முழுமையான விருப்பம்தான். அது இப்போது இருக்கிறது. பிறகு எதைத் தேடி இந்தப் போராட்டம்?” இதை உணர்ந்தபோது அவருக்கு கொஞ்சம் சக்தி பிறந்தது. எனவே நதியைக் கடந்த அவர், தற்காலத்தில் புத்தரைக் காட்டிலும் கூடுதல் புகழ் பெற்றிருக்கிற போதி மரத்தின் கீழ் சென்றமர்ந்தார்.

அந்த மரத்தின் கீழ் சம்மணம் இட்டு அமர்ந்த அவர், 'ஞானோதயம் நிகழும் வரை நான் அசைய மாட்டேன், எழுந்தால் ஞானம் பெற்றவனாக எழுவேன், இல்லையெனில் இப்படியே இறந்துவிடுவேன்' என்று முடிவு செய்தார். ஒரே கணத்தில் ஞானம் பிறந்தது.

அவர் முழுமையாக ஞானோதயம் பெறுகிறபோது நிலவு உதயமாகிக்கொண்டு இருந்தது. கண் விழித்துப் பார்த்தபோது, அவருக்கு எதிரே ஐந்து சீடர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களை சீடர்கள் என்றுகூட சொல்ல முடியாது. ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டிருந்த சக பயணிகள் அவர்கள். இவரது தீவிரத்தைப் பார்த்து அவர் வழிகாட்டுவார் என்று அவர் முன் அமர்ந்திருந்தார்கள்.

கண் விழித்ததுமே புத்தர் சொன்ன முதல் வார்த்தை, “வாருங்கள், நாம் உணவருந்தலாம்” என்பதுதான். ஐந்து பேரும் அதிர்ந்தார்கள். ஆனால் எப்படியோ உணவுக்கு ஏற்பாடு செய்தார்கள். புத்தர் நிதானமாக அமர்ந்து நன்றாகச் சாப்பிட்டார். இந்த ஐந்து பேருக்கும் நம்பிக்கை போய்விட்டது.

வயிறாரச் சாப்பிடுகிற ஒருவர் எப்படி ஆன்மீகவாதியாக இருக்க முடியும் என்று கருதி அவரை விட்டு விலகிச் சென்றுவிட்டார்கள். புத்தர் பெருங்கருணை காரணமாக சில ஆண்டுகள் கழித்து அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து ஞானோதயத்தின் பாதையில் அவர்களை நெறிப்படுத்தினார்.

2500 ஆண்டுகளுக்கு முன்பு தன்னில் மலர்ந்த கௌதம புத்தர், ஆன்மீக உலகில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

ஆன்மீகப் பாதையில் நடையிடும் ஒவ்வொருவருக்கும் புத்த பூர்ணிமா மிக முக்கியமான நாளாகும்!

Advertisement