ஐயையோ... இது நிஜ போலீஸ் ஸ்டேஷனா... ஒரிஜினல் போலீஸிடம் மாட்டிக் கொண்ட போலி போலீஸ்!
திருவனந்தபுரம்: 'போலீசாக வேடமிட்டு டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பணம் பறிக்கும் மோசடி ஆசாமி ஒருவர், தவறுதலாக கேரளா, திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிக்கு வீடியோ கால் செய்து மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இணையதளத்தை பயன்படுத்தாத ஆளே கிடையாது. இது மோசடி கும்பலுக்கு ஒரு வரப்பிரசாதம் போல் அமைந்துள்ளது. டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பணம் பறிக்கும் மோசடி கும்பல் அட்டூழியம் தாங்க முடியவில்லை. அண்மையில் பிரதமர் மோடியே மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு மெசேஜ் கொடுத்து இருந்தார். மக்கள் யாரும் மோசடி கும்பலிடம் சிக்கிவிட கூடாது. டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பணம் பறிக்கும் மோசடி கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
இந்த சூழலில், 'போலீசாக வேடமிட்டு டிஜிட்டல் அரெஸ்ட் செய்து பணம் பறிக்கும் மோசடி ஆசாமி ஒருவர், யார் என்று தெரியாமல், கேரளா, திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிக்கு வீடியோ கால் செய்த காமெடி சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் ஸ்டேஷன் போன்று செட்டப் செய்யப்பட்டுள்ள இடத்தில் உட்கார்ந்து கொண்டு, போலீஸ் வேடமிட்டுள்ள ஆசாமி, வீடியோ போனில் பேசுகிறார்.
தான் போன் செய்யப் போவது ஒரு போலீஸ் அதிகாரிக்கு என்று தெரியாமல், வழக்கம்போல் வீடியோ அழைப்பில் அவர் பேசுகிறார். டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப் போவதாக கூறி உதார் விடுகிறார். தன்னுடன் பேசுபவர் போலி போலீஸ் என்பதை புரிந்து கொண்ட சைபர் கிரைம் அதிகாரி, நீ பேசிக் கொண்டிருப்பது திருச்சூர் சைபர் கிரைம் போலீஸ் பிரிவுடன் என்று கூறி, மோசடிப் பேர்வழியை விசாரிக்கிறார்.
உன்னுடைய லொகேஷன், உன்னுடைய அட்ரஸ் எல்லாம் எங்களிடம் மாட்டிக் கொண்டு விட்டது என்று போலீஸ் அதிகாரி கூறியவுடன், மோசடி ஆசாமி பயந்து நடுங்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. திருச்சூர் போலீசார் வெளியிட்டுள்ள இந்த வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் கமென்ட் செய்து வருகின்றனர். இது போன்ற மோசடி ஆசாமிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும். போலீஸ் ஸ்டேஷனில் வைத்து டிரீட்மென்ட் கொடுக்க வேண்டும் என மோசடியில் பணத்தை இழந்த பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.