18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை; வானிலை மையம் 'அப்டேட்'
சென்னை: டெல்டா உட்பட 18 மாவட்டங்களில் இன்று (நவ.,15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதே போன்று, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக,தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று (நவ.,15) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் நவ.,21ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.