வி.சி.க., நிர்வாக அமைப்பில் மாற்றம்; கட்சியினருக்கு திருமாவளவன் கடிதம்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்வது குறித்த வரையறைகளை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.


2026 சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் அதற்கான வேலைகளை தற்போது தொடங்கி விட்டன. இந்த சூழலில் கட்சியின் மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றியம், நகரம், வார்டு வரையிலான பொறுப்புகள் மறுவரையறை செய்யும் பணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஈடுபட்டுள்ளது.


இது தொடர்பாக கட்சியின் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வரையறைகளை வி.சி.க., தலைவர் திருமாவளவன் அவரே எழுதி வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

* ஒரு சட்டமன்ற தொகுதிக்கான எல்லையே மாவட்ட நிர்வாக எல்லையாகும். எனவே, அந்த எல்லைக்குட்பட்டவர்கள் மட்டுமே மாவட்ட நிர்வாகப் பொறுப்புகளுக்கு விண்ணப்பித்தல் வேண்டும்.

* மாவட்ட நிர்வாகத்திற்கு மட்டுமின்றி, மாநிலப் பொறுப்புகளுக்கும் ஒன்றி, நகர, பேரூர் நிர்வாகங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். கட்சிக்கு மட்டுமின்றி துணைநிலை அமைப்புகளுக்கான பொறுப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.

* மாநில பொறுப்புகள் ரூ.2,000, மாவட்ட பொறுப்புகள் ரூ.1,000, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்புகள் ரூ.500 கட்டணங்களை தமிழ்மண் வங்கிக் கணக்கிலேயே செலுத்திட வேண்டும்

* விண்ணப்பங்களை ஒருங்கிணைப்புக்குழுவிடம் ஒப்படைக்க நவ.,20ம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாகவும் பதிவேற்றம் செய்யலாம்.

* ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

* தற்போது சூழலில் பொறுப்புகளுக்கான விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்ய இயலாது. எனவே, ஒருங்கிணைப்புக்குழுவோடு கலந்தாய்வு செய்து பொறுப்பாளர்கள் நியமனம் நடைபெறும்.

* கட்சியின் தலைவர், பொதுச்செயலாளர்கள் இருவர் மற்றும் 4 உறுப்பினர்கள் கொண்ட குழுவே பட்டியலை இறுதி செய்யும், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement