என் மீனவனை இலங்கை கடற்படை தொட்டால்... மக்களிடம் தினுசாய் சான்ஸ் கேட்ட சீமான்

10

தூத்துக்குடி: ''நாட்டை ஆளும் வாய்ப்பை ஒரே முறை என்னிடம் கொடுங்கள், அதன் பின்னர் தமிழக மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தினால் என்னிடம் கேளுங்கள்,'' என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.



தூத்துக்குடியில் நிருபர்கள் சந்திப்பில் அவரிடம் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து சீமான் கூறியதாவது;

என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்? மனது முழுக்க கோபமும், வெறுப்பும், வலியும் இருக்கிறது. என்ன செய்யலாம் என்று சொல்கிறீர்கள்? ஒரு தடவை என் மீனவனை அடித்தால் அடிப்பேன் என்று கூறியதற்கு நான் 6 மாதம் சிறையில் இருந்தேன்.

ஒரே வழிதான்... ஒருமுறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள். இந்த நாட்டை ஆளுகிற வாய்ப்பை ஒரே ஒரு முறை எனக்கு தாருங்கள். என் மீனவனை இலங்கை கடற்படை தொட்டால் பிறகு பாருங்கள். எல்லை தாண்டி வருவதுதான் பிரச்னை.

கேரள மீனவர்கள் எல்லை தாண்டி வருகிறார்களா, இல்லையா? ஏன் அவர்கள் மட்டும் சிறைபிடிக்கப்படுவது இல்லை, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது இல்லை, சுட்டுக்கொல்லப்படுவது இல்லை. இதற்கு யாராவது பதில் சொல்லுங்கள். அவர்களை கேட்க ஆள் இருக்கிறது, எனக்கு ஆள் இல்லை.

நான் வந்து உட்கார்ந்தால் (ஆட்சியில்) என் மீனவனை தொட்டு பார்த்துவிடு. உன்னால் அது முடியாது. காசு கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள் என்ற நிலைமை இருக்கும் வரை, அதை உருவாக்கி வைத்திருக்கும் இந்த கட்சிகளின் தலைவர்கள் இருக்கும் வரை நல்லாட்சி மலராது.
நாடும், மக்களும் நிம்மதியாக வாழ முடியாது. அதுவரை இந்த பிரச்னை இருக்கத்தான் செய்யும், வேறு வழியே கிடையாது.

இவ்வாறு சீமான் கூறினார்.

Advertisement