மஹா.,வில் அமித்ஷாவின் ஹெலிகாப்டரில் சோதனை
மும்பை: தேர்தல் பிரசாரத்திற்காக மஹாராஷ்டிராவின் ஹிங்கோலி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் மற்றும் உடைமைகளை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு நவ.,20ல் சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அங்கு தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 11ம் தேதி முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேயின் ஹெலிகாப்டர் மற்றும் உடைமைகளை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அக்கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் மட்டும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். ஆனால், ஆளுங்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்களிடம் சோதனை எதுவும் நடத்தப்படவில்லை என தேர்தல் ஆணையம் மீது குற்றம்சாட்டினர். ஆனால், இதனை மறுத்த தேர்தல் ஆணையம், வழக்கமான விதிமுறைகளையே பின்பற்றி வருவதாக கூறியது.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பட்னாவிஸ் ஆகியோரின் ஹெலிகாப்டர்கள் மற்றும் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தல் பிரசாரத்திற்காக ஹிங்கோலி மாவட்டத்திற்கு வந்தார். அங்கு அவர் வந்த ஹெலிகாப்டர் மற்றும் உடைமைகளை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியுள்ளதாவது: தேர்தல் பிரசாரத்தின் போது எனது ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்தனர். நேர்மையாக தேர்தல் நடத்துவதிலும், ஆரோக்கியமான தேர்தல் அமைப்பிலும் பா.ஜ.,வுக்கு நம்பிக்கை உள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிகளை கடைபிடிப்போம். உலகில் வலிமையான ஜனநாயக நாடாக இந்தியா திகழ்வதற்கு நமது கடமையை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த வீடியோவில் அமித்ஷா கூறினார்.