கோடநாடு வழக்கு குறித்து பழனிசாமியிடம் ஏன் விசாரிக்கக் கூடாது: ஐகோர்ட் கேள்வி
சென்னை: '' கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், தற்போது முதல்வராக இல்லாத அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் ஏன் விசாரணை நடத்தக்கூடாது,'' என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
குற்றப்பத்திரிகை
மறைந்த ஜெயலலிதா ஓய்வெடுக்க செல்லும், நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்ரல் 23ம் தேதி, ஓம் பஹதுார் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார். மேலும், ஆவணங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக, சோலுார்மட்டம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக, நீலகிரி அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி முன்னாள் கலெக்டர் சங்கர், முன்னாள் எஸ்.பி., முரளி ரம்பா, அ.தி.மு.க., நிர்வாகி சஜீவன், எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க அனுமதி கோரி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர், நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மறு ஆய்வு மனு
இந்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்து, மற்றவர்களை விசாரிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து ஏப்ரலில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது: இந்த வழக்கில், முன்னாள் முதல்வரின் தொடர்பு குறித்து சயான் பேசியுள்ள நிலையில், அதன் தீவிரத்தை பரிசீலிக்க, நீலகிரி நீதிமன்றம் தவறிவிட்டது. ஜெயலலிதாவின் மரணத்துக்கு பின், சசிகலா, இளவரசி கட்டுப்பாட்டில் கோடநாடு எஸ்டேட் இருந்தது. அதனால், கொள்ளையின் போது காணாமல் போன பொருட்கள் குறித்து அவர்களுக்கு தான் தெரியும். புலன் விசாரணை குழு, வெளிப்படையான விசாரணையை மேற்கொள்ளாமல், முக்கிய குற்றவாளிகளை விட்டு விட்டது. எனவே, நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, பட்டியலில் விடுபட்டவர்களை விசாரிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி வேல்முருகன், பழனிசாமி தற்போது முதல்வராக இல்லாத போது எதிர்தரப்பு சாட்சியாக ஏன் அவரிடம் விசாரணை நடத்தக்கூடாது என கேள்வி எழுப்பி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.