கண்ணியம், மரியாதை இருக்கணும்; 'மாஜி' அமைச்சரை கண்டித்த ஐகோர்ட்
சென்னை: விமர்சிக்கும்போது கண்ணியம், மரியாதை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு சென்னை ஐகோர்ட் அறிவுரை வழங்கி உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பரில் விழுப்புரம் கோலியனூரில் அ.தி.மு.க., கண்டன கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்வர் பற்றி மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசினார்.
இதையடுத்து, சி.வி. சண்முகத்துக்கு எதிராக விழுப்புரம் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டில் சி.வி. சண்முகம் தரப்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந் நிலையில் அந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் கூறியதாவது;
ஆளுங்கட்சியை விமர்சிக்கும் போது கண்ணித்துடனும், எச்சரிக்கையுடனும் பேச வேண்டும். ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமை. அதில் கண்ணியம் தேவை. அடுத்த தலைமுறையினர் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
மனுதாரர் சி.வி.சண்முகம் சாதாரண நபர் போல் பேசக்கூடாது. அவர் சட்டம் படித்தவர். மாஜி அமைச்சரான அவர் மீது ஏற்கனவே 3 வழக்குகள் இருக்கின்றன.
இவ்வாறு அறிவுறுத்திய நீதிபதி வேல்முருகன், வழக்கு விசாரணையை நவ.22ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.