குஜராத்தில் 700 கிலோ போதைப்பொருள் பறிமுதல்: சர்வதேச கடத்தல் கும்பல் கைது
ஆமதாபாத்: குஜராத் கடற்பகுதியில் கப்பலில் இருந்து 700 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச கடத்தல் கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
பதிவு செய்யப்படாத கப்பல் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவதாக இந்திய கடற்படைக்கு உளவுத்தகவல் கிடைத்தது. விசாரணையில் அது உறுதியானது. இதனையடுத்து இந்திய கடற்படை கப்பல்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன.
இன்று, இந்திய கடல் எல்லைக்குள் வெளிநாட்டு கப்பல் வந்த போது, இந்திய கடற்படை, போதைப்பொருள் கடத்தல் பிரிவினர், குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினர் சோதனை செய்தனர். அதில் 700 கிலோ மெத்தம்பேட்டமைன் போதைப்பொருள் இருந்தது. அதில் இருந்த வெளிநாட்டினர் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஈரானைச் சேர்ந்தவர்கள் என அவர்கள் கூறினாலும், அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லை. கைதானவர்கள் சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.இதற்காக அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்காக 'சாகர் மாரத்தான்' என்ற திட்டத்தை தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்தாணடு துவக்கினர். இதில், இந்திய கடற்படை, கடலோர காவல்படை, குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர்.
அந்த வகையில், தற்போது வரை நடத்தப்பட்ட சோதனையில் 3, 400 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இது தொடர்பாக ஈரானைச் சேர்ந்த 11 பேர் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 14 பேர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.