68 வயது... 7ம் வகுப்பில் பாஸ் ஆன பிரபல மலையாள நடிகர் !

திருவனந்தபுரம்; பிரபல மலையாள நடிகர் இந்திரன்ஸ், எழுத்தறிவு இயக்கத்தின் 7ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.



கேரளாவில் திருவனந்தபுரம் குமாரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்திரன். திரைப்படங்களில் இந்திரன்ஸ் என்ற பெயரில் நடித்து வருகிறார். பிரபலமான நடிகரான அவர் படித்தது 4ம் வகுப்பு வரை மட்டுமே. தொடக்க காலத்தில் குடும்பத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடியால் படிப்பை கைவிட்டவர்.

சினிமாக்களில் பிரபலமான தருணங்களில், பள்ளி படிப்பை தொடர எண்ணினார். அவருக்கு எழுத்தறிவு இயக்கம் கைகொடுத்தது. அதன் மூலம் இந்திரன்ஸ் 7ம் வகுப்பில் சேர்ந்தார். களப்பணி ஆசிரியர் விஜயலட்சுமி என்பவர், இந்திரன்ஸ் தேர்வுக்கு தயாராக உதவியாக இருந்தார். அவருக்கு தினமும் வீட்டிலேயே டியூஷன் எடுத்து படிப்பில் மேம்பட உதவினார்.

உரிய பயிற்சிக்கு பின்னர் 7ம் வகுப்பு தேர்வை இந்திரன்ஸ் அண்மையில் எழுதி இருந்தார். இந் நிலையில் அந்த தேர்வின் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில், இந்திரன்ஸ் தேர்ச்சி பெற்றுள்ளார்.

இந்த தேர்வில் மாநிலம் முழுவதும் இருந்து மொத்தம் 1043 பேர் தேர்வு எழுதி இருந்தனர். அவர்களில் இந்திரன்ஸ் உடன் சேர்த்து, 1007 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நேரடியாக 10ம் வகுப்பில் சேரலாம். அதில் இந்திரன்ஸ் தேர்ச்சி பெற்றால் எழுத்தறிவு இயக்கத்தின் தூதராக நியமிக்கப்பட உள்ளதாக எழுத்தறிவு இயக்க இயக்குநர் ஒலினா தெரிவித்துள்ளார்.

Advertisement