ஓய்வு பெறுகிறார் டிம் சவுத்தீ: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து
வெலிங்டன்: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நியூசிலாந்தின் டிம் சவுத்தி ஓய்வு பெறுகிறார்.
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தீ 35. கடந்த 2008ல் இங்கிலாந்துக்கு எதிரான நேப்பியர் டெஸ்டில் அறிமுகமானார். முதல் போட்டியில் பேட்டிங் (77*), பவுலிங்கில் (5 விக்.,) அசத்தினார். கடைசியாக புனே டெஸ்டில் விளையாடிய இவர், இதுவரை 104 டெஸ்ட் (385 விக்.,), 161 ஒருநாள் (221), 126 சர்வதேச 'டி-20' (164) போட்டியில் பங்கேற்றுள்ளார்.
டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட் சாய்த்த நியூசிலாந்து பவுலர்கள் பட்டியலில் ரிச்சர்டு ஹாட்லீக்கு (431 விக்.,) பின் 2வது இடத்தில் உள்ளார் சவுத்தீ. டெஸ்ட் அரங்கில் 100 அல்லது அதற்கு மேலான போட்டியில் பங்கேற்ற 6 நியூசிலாந்து வீரர்களில் ஒருவராக உள்ளார். தவிர டெஸ்டில் 300, ஒருநாள் போட்டியில் 200, சர்வதேச 'டி-20' போட்டியில் 100 விக்கெட் சாய்த்த ஒரே பவுலர் என்ற பெருமை பெற்றுள்ளார். தவிர இவர், மூன்று வித போட்டியிலும் (14 டெஸ்ட், 1 ஒருநாள், 20 சர்வதேச 'டி-20') நியூசிலாந்து அணியை வழிநடத்தினார்.
இம்மாத இறுதியில் நியூசிலாந்து செல்லும் இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக டிம் சவுத்தீ தெரிவித்துள்ளார்.
சவுத்தீ கூறுகையில், ''நியூசிலாந்துக்காக 18 ஆண்டுகள் விளையாடியது மிகப் பெரிய கவுரவம். ஓய்வு பெற இதுவே சரியான நேரம்,'' என்றார்.