தொடரை வென்றது இங்கிலாந்து: வெஸ்ட் இண்டீஸ் அணி ஏமாற்றம்
செயின்ட் லுாசியா: மூன்றாவது 'டி-20' போட்டியில் அசத்திய இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இங்கிலாந்து வென்றது. மூன்றாவது போட்டி செயின்ட் லுாசியாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எவின் லீவிஸ் (3), ஷாய் ஹோப் (4), நிக்கோலஸ் பூரன் (7), ராஸ்டன் சேஸ் (7), ஷிம்ரன் ஹெட்மயர் (2) ஏமாற்றினர். கேப்டன் ராவ்மன் பாவெல் (54), ரொமாரியோ ஷெப்பர்டு (30) நம்பிக்கை தந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 145 ரன் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் சாகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (4), கேப்டன் பட்லர் (4), ஜேக்கப் பெத்தெல் (4) ஏமாற்றினர். வில் ஜாக்ஸ் (32), சாம் கர்ரான் (41), லியாம் லிவிங்ஸ்டன் (39) கைகொடுத்தனர். டெரன்ஸ் ஹிண்ட்ஸ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ரெஹான் அகமது வெற்றியை உறுதி செய்தார்.
இங்கிலாந்து அணி 19.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 149 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஓவர்டன் (4), ரெஹான் (5) அவுட்டாகாமல் இருந்தனர். 2 போட்டி மீதமுள்ள நிலையில் இங்கிலாந்து அணி, 3-0 என தொடரை கைப்பற்றியது.